Tamilnadu

கீழடியை பார்வையிட இனிமேல் அனுமதி இல்லை: அகழாய்வு குழிகளை மூடும் தமிழக அரசு - ஆறாம் கட்ட பணிகள் எப்போது?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. சுமார் 47 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளது.

கீழடியில் நடைபெற்ற ஐந்து கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரையிலும், உறைகிணறு, செங்கல் கட்டுமானச் சுவர், செங்கல் தொட்டி, கட்டுமானத் தளம் மற்றும் பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி போன்றவைக் கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடியில் தோண்டப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி கீழடிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் அகழாய்வு குழிகளை மூடவும் தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். கீழடி பற்றி கேள்விப்பட்டு தமிழக மக்கள் பார்வையிடும் அதேவேளையில் அண்டை மாநிலங்களில் இருந்தும் மக்கள் பார்வையிட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அகழாய்வுக் குழிகளை மூடாமல் தொடர்ந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும், அருங்காட்சியகமாக மாற்றவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அப்பகுதி மக்களும், தொல்லியல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணியை 2020 ஆண்டு ஜனவரியில் தொடங்குவதற்கு, மத்திய தொல்லியல்துறையின் அனுமதி பெற வேண்டும். மேலும் ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்காக எப்போது அனுமதி கிடைக்கும், எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை இல்லை என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “கீழடி தமிழ் சமூகத்தின் வரலாற்றுக் கண்ணாடி, அந்த கண்ணாடியை தமிழர்கள் பார்வையிடவேண்டும். அதை அனைத்து மக்களும் பார்க்க விரும்புவதால் பார்வையிடுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும். ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறும் கீழடி, மணலூர், அகரம், கொந்தகை ஆகிய ஊர்களை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும் ” எனக் கோரிக்கை வைத்தார்.