Tamilnadu
‘சுல்தான்’ படப்பிடிப்பில் ரகளை : சுய விளம்பரத்திற்காக இந்துத்வா கும்பல் போராட்டம் - படக்குழு கண்டனம்!
திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்ற திரைப்பட படப்பிடிப்பில் புகுந்து இந்துத்துவா குண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.
நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் கடந்த 20 தினங்களாக நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு மலைக்கோட்டைக்குள் வந்த பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, வி.எச்.பி. உள்ளிட்ட இந்து அமைப்பினர் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் உடனடியாக படப்பிடிப்புக் குழுவினரை நிர்ப்பந்தித்து வெளியேற்றினர். ஆனால் இந்துத்துவா அமைப்பினரை கைது செய்யவில்லை.
முறையாக அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்திய குழுவினரை வெளியேற்றிவிட்டு படப்பிடிப்பில் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,“நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'சுல்தான்' படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னை, திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இதனிடையே இப்படம் திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், அதனை திண்டுக்கல், மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாதெனவும் கூறி ஒரு அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களைத் தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது.
ஒரு திரைப்படம் எதைக் காண்பிக்கக் கூடாதென்பதை உறுதி செய்யத் தணிக்கைக் குழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது.
இது நம் நாட்டின் சட்டம். நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும், வரலாற்றுத் தலைவர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் சாதி, மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்கிறோம்''. என ட்ரீம் வாரியர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!