Tamilnadu
ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமாணி ராஜினாமா செய்ததன் பின்னணி என்ன? - மேகாலயாவுக்கு மாற்றப்பட்டது ஏன்?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமாணியின் பதவி விலகல் தான் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தஹில் ரமாணி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றுக் கொண்டார். இன்னும் ஓராண்டு காலம் மீதமிருக்கும் நிலையில் மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் (உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த முடிவை பரிசீலனை செய்யக்கோரி தஹில் ரமாணி அனுப்பிய கடிதம் நிராகரிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்தோம். அதன்படி, தஹில் ரமாணியின் செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளே மாற்றலுக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
2018 ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற நீதிபதி தஹில் ரமாணிக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் எஞ்சி இருக்கிறது. அப்படி இருக்கும்போது 70 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்திற்கு அனுப்பியதற்கு முக்கியக் காரணம் அவரின் செயல்பாடுகள் தான்.
மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை சென்னைக்கு அனுப்பியபோதே பெரிய அளவில் அவருக்கு உடன்பாடு இல்லை. மகாராஷ்டிராவை ஒட்டி இருக்கக்கூடிய மாநிலத்திலேயே ஒதுக்கக் கோரியிருக்கிறார். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் வந்து ஒரு வருடகாலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் தஹில் ரமாணியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் கருத்துக் கேட்பது வழக்கம். அப்படி கேட்கும்போது செயல்பாடுகள் எதுவும் சரி இல்லை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், தஹில் ரமாணி, சென்னை வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பது இல்லை; அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் பெரிய அளவில் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கிறார். நீதிபதி பானுமதி உடன் மட்டுமே தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் அவர் சென்னையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார் எனவும் புகார் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
எனவே, அவரை சென்னையிலிருந்து மேகாலயாவுக்கு மாற்ற பரிந்துரை மட்டுமே செய்யபட்டது. அதன் பின்னர் மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஜனாதிபதிக்கு அனுப்புவது என இன்னும் இரண்டு நிலைகள் இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார் தஹில் ரமாணி. உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதாக ராஜினாமா என்ற முடிவுக்கு வரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!