Tamilnadu
“கார் வாங்குவதற்காக கொலை செய்தேன்” : டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்துள்ள பேட்டப்பனூர் டாஸ்மாக் கடையில் ராஜா என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். ராஜா கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி கடையை மூடும் சமயத்தில், கடைக்குள் புகுந்து அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, அன்றைய தினம் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.1.82 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த நாள் காலையில் வந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஜெகநாதன், ராஜா பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து குருபரப்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிருஷ்ணகிரி எஸ்.பி பண்டி கங்காதர், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. சண்முகத்திடம் விசாரணை நடத்திய போலீஸாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே சண்முகத்தை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துவரும் அவரது மகன் அரவிந்தன் பக்கம் காவல்துறையின் பார்வை திரும்பியது.
அரவிந்தனின் உடலில் உள்ள காயங்கள் குறித்து காவலர்கள் மேலோட்டமாக விசாரிக்க, வேலை செய்யும் இடத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். அரவிந்தன் வேலை பார்க்கும் இடத்தில் காயம் ஏற்பட்டது உண்மையா என காவல்துறை விசாரித்ததில், அரவிந்தன் சொன்னது பொய் என்பதைத் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் ராஜாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான் அரவிந்தன்.
பின்னர் அவன் அளித்த வாக்குமூலத்தில், கார் வாங்கவேண்டும் என்ற ஆசையில், டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவை கொலை செய்து, அவரிடம் இருந்த விற்பனை பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளான். அரவிந்தனிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, இருசக்கர வாகனம், ரத்தக் கறை படிந்த துணி, 1.82 லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டுள்ள போலிஸார் அரவிந்தனை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!