Tamilnadu

“மகளின் திருமண ஏற்பாடுகள் திட்டமிட்டபடி முடியவில்லை”- பரோலை நீட்டிக்கக்கோரும் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஆறு மாதம் பரோல் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சிறைத்துறை விதிகளின் படி ஒரு மாதமே பரோல் வழங்கமுடியும் என அரசு தரப்பு தெரிவித்ததால் இதனை விசாரித்த நீதிபதிகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கடந்த ஜூலை 5ம் தேதி உத்தரவிட்டனர். இதனையடுத்து கடந்த ஜூலை 25ம் தேதி நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார்.

வேலூர் சத்துவாச்சேரியில் தங்கியிருக்கும் நளினி, தனது பரோலை மேலும் ஒருமாதம் நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் முடியவில்லை என்றும், செப்டம்பர் முதல் வாரம் தான் இலங்கை மற்றும் லண்டனில் இருந்து தனது உறவினர்கள் வருகை தர இருப்பதால் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பரோல் நீட்டிப்பு குறித்து ஆக.,6ல் அரசுக்கு அளித்த மனுவை கடந்த 13ம் தேதி நிராகரித்ததால், அரசின் அந்த உத்தரவை ரத்து செய்து மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, நளினியின் மனுவுக்கு நாளை மறுநாள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.