Tamilnadu

கிராமத்திற்குள் வராமல் சென்ற அரசுப் பேருந்து..துரத்திச் சென்று சிறை பிடித்த இளைஞர்கள் - கடலூரில் பரபரப்பு

கடலூரில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் உள்ளது களிஞ்சிக்குப்பம் கிராமம். இந்த கிராமத்திற்கு தினமும் ஒரு முறை மட்டுமே அரசு பேருந்து வந்து செல்லும். அந்த ஒரு பேருந்தை மட்டுமே நம்பி களிஞ்சிக்குப்பம் கிராம மக்கள் காலையில் அந்த அரசு பேருந்தையே நம்பி பக்கத்து மாவட்டத்திற்கு வேலைக்கும், பள்ளிக்கும் செல்கின்றனர்.

அந்த பேருந்தை தவறவிட்டால் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அடுத்த ஊரில் தான் பேருந்தில் ஏறி பணிக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் அரசு பேருந்து களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு உள்ளே வராமல் வேறு ஒரு வழிதடத்தில் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்திற்காகக் காத்திருந்த தினக் கூலித் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அந்த பேருந்து வேறு ஒரு வழிதடத்தில் இயக்கப்படுவதை அறிந்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து அந்த பேருந்தை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு, “இன்று விடுமுறை நாள் என்பதால் ஊருக்குள் வரவில்லை” என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட இளைஞர்கள், எங்கள் ஊருக்கு முறையாக பேருந்து வருவது இல்லை. இனியும் அப்படி நடக்காது என உத்தரவாதம் கொடுப்பதாக எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, தன்னுடைய தவறை அரசுப் பேருந்து ஓட்டுநர் கவியரசன் இளைஞர்களுக்கு கடிதம் ஒன்றை அளித்தார். அதில், “தினமும் களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு பேருந்து வந்து செல்லும்” என உத்தரவாதம் அளித்ததையடுத்து, கிராம இளைஞர்கள் பேருந்தை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.