Tamilnadu

மோடி வருகை தாமதம் : பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்து மாணவர்களை அலைக்கழிக்கும் சென்னை ஐ.ஐ.டி!

சென்னை ஐ.ஐ.டி 56 வது பட்டமளிப்பு விழாவை ஜூலை 19 அன்று நடத்த ஐ.ஐ.டி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் திங்கள்கிழமை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் / அறிஞர்கள் பங்கேற்பதாக இருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தின் பல பகுதியிலும் உள்ளவர்கள். இரண்டு வாரங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்பதால் முன்பே பயணங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பட்டமளிப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பதால் பயண டிக்கெட்டுகளையும், ஹோட்டல்களையும் முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போது நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினால் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளையும், ஹோட்டல்களையும் மாணவர்கள் ரத்து செய்துள்ளனர். பின்னர் மீண்டும் அறிவிப்பு வரும்போது முன்பதிவு செய்யவேண்டும் என்பதால் பெரும் சிரமத்தை சந்திப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், "எனது நண்பர் இங்கு படிப்பு முடிந்ததுமே, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காக சென்றுவிட்டார். ஜூலை 19ம் தேதி பட்டமளிப்பு விழா என்பதால் விழாவில் கலந்து கொள்ளவதற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் அதை அவர் ரத்து செய்யவேண்டும். அதனால் அவர் பெரிதும் பாதிக்கப்படுவார்.

மேலும், ஐ.ஐ.டி நிர்வாகம் மாற்றுத் தேதியை குறிப்பிடாததால் பல மாணவர்கள் ாதிப்படைந்துள்ளனர். ஐ.ஐ.டி கூறுவது போல பிரதமர் மோடி வருவார் என்பது சாத்தியமில்லை. எனவே, இது மாணவர்களுக்கு ஒரு ஆபத்தான சூழ்நிலை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்குள்ள மாணவர் அமைப்பினர் இதுகுறித்து கூறுகையில், ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினால் அதிகமான மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களால் குறுகிய கால அறிவிப்பால் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது, மேலும் அவர்கள் விமானத்தில் தான் வரவேண்டிய நிலைமை ஏற்படும். இது அவர்களுக்கு தேவையற்ற நிதிச் சுமையாக அமையும். எனவே முன்கூட்டியே சரியான தேதியை அறிவித்து கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.