Tamilnadu
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்:வைகோ வேண்டுகோள்!
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள மக்கள் கடும் வேதனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. அதுமட்டும் இன்றி அவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்கள் முழுமையாக செல்லவில்லை எனவும் குற்றசாட்டு உள்ளது. இன்னிலையில் இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, ”சிங்கள அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைப்பதற்காகத் தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பது வழக்கம்.
ஆனால், ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர். இப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கின்றார்கள்.
எந்தவிதமான குற்றச்சாட்டுப் பதிவும் இல்லாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே அடைபட்டுக் கிடந்த இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது. இந்திய அரசு, ஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது.
ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடிஉரிமையும் வழங்கி இருக்கின்றன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.
ஆனால், இந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.
எனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் ” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?