Tamilnadu
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தஞ்சையில் 2,000 வீடுகளை இடிக்கத் திட்டம்?!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா அமைப்பதற்காக தஞ்சாவூரில் 2 ஆயிரம் வீடுகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்றனர்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சை உள்பட பல மாநகராட்சிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மத்திய அரசு தேர்வு செய்தது. இந்த திட்டத்தின்படி மத்திய அரசு நிதியில் வளர்ச்சிப் பணிகள், சுகாதார வசதிகள், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆனால், மத்திய அரசு அறிவித்த எந்த நகரமும் இன்னும் ஸ்மார்ட் சிட்டி ஆகவில்லை.
தஞ்சாவூர் மாநகராட்சியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற்றுள்ளதால், இங்கு பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி பணிக்காக ஏற்கனவே இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், அந்த இடங்களில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில், அடுத்த கட்டமாக 19-வது வார்டுக்கு உட்பட்ட மேல அலங்கம், செக்கடி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பட்டா விவரங்களைக் கேட்டுள்ளனர்.
100 வருடங்களுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் அம்மக்களிடம் மாநகராட்சிக்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது உள்ளது. ஆனால், பட்டா இல்லாததால் வீடுகளை காலி செய்யுமாறு கூறி உள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்றனர்.
தகவல் அறிந்த தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம் அங்கு வந்து பொதுமக்ககளிடம் சமாதானம் கூறி, இதுகுறித்து மாநகராட்சியில் விளக்கம் கேட்கலாம் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டாலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
Also Read
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
கும்கி யானைகளை பராமரிப்பதற்காக ரூ.8 கோடியில் சாடியவல் யானைகள் முகாம் : திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!