Tamilnadu

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம் !

தமிழக காவல்துறையில் கைரேகைப்பிரிவு எஸ்.ஐ பணிக்கு நடந்த தேர்வில் காவலர் அருணாச்சலம் என்பவர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். கணிதம் தொடர்பான ஒரு கேள்விக்கு அருணாச்சலம் அளித்த பதில் தவறு என சுட்டிக்காட்டி அதற்கு மதிப்பெண் அளிக்கவில்லை. இதனால் அவருக்கு பணியிடம் கிடைக்கவில்லை.

இதனை எதிர்த்து அருணாச்சலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் அருணாச்சலம் மனுவின் உண்மைத் தன்மையை அறிவதற்காக ஐ.ஐ.டியில் பணியாற்றும் கணித நிபுணரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

இதன்படி ஐ.ஐ.டி.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கோர்ட்டில் சமர்ப்பித்தது. அதில் மனுதாரர் அருணாச்சலம் அளித்த பதில் தவறானது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அருணாச்சலம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மனுதாரர் அருணாச்சலம் தரப்பில் மீண்டும் ஒரு மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் மூர்த்தி என்று எந்த ஒரு நபரும் இல்லை. எனவே அந்த அறிக்கை போலியானது என தெரிவித்திருந்தார். இது குறித்து கோர்ட் தரப்பில் மீண்டும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு போலி அறிக்கை வழங்கப்பட்டதாகவும், அது தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட ஜி.வி. குமார், டி.குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கோர்ட்டில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட் தாமாகவே முன்வந்து, கோர்ட்டுக்கு தவறான தகவலை அளித்து மனுதாரருக்கு அநீதி இழைத்ததால் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்வதாக தெரிவித்தது. இந்த விவகாரம் காவல்துறை தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 30ம் தேதியன்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய டி.எஸ்.பி, அரசு சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியர் குமார் என்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர் செயலர் ஐ.ஜி செந்தாமரை கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.உள்துறை செயலர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.