Sports
இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் மறுத்த வங்கதேச அணி... T20 உலகக்கோப்பையில் பங்கேற்குமா வங்கதேசம்?
ஐசிசி டி20 உலகக்கோப்பையின் 10வது சீசன் இந்தியாவில் பிப்ரவரி 07ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த போட்டிகளில் உலகெங்கும் உள்ள பல்வேறு அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கிடையில், வங்கதேச அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும், எங்களது அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது.
இந்த முடிவை வங்கதேச அணி எடுக்க முக்கிய காரணமாக, வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறி பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது. குறிப்பாக வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக செய்திகள் பரவியது.
இதனை காரணமாக வைத்து ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது என அழுத்தம் தரப்பட்டு, கொல்கத்தா அணிக்காக ரூ. 9.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த முஸ்தாபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்கும்படி பிசிசிஐ கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்தது. இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியும் முஸ்தாபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்தது.
இதற்கு கடும் எதிர்வினையாற்றிய வங்கதேச கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு துறைக்கான ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ஐபிஎல் தொடரை இனிமேல் வங்கதேசத்தில் ஒளிபரப்பவும் தடை விதித்தனர். இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச வீரர்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி வங்கதேச அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுங்கள் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாகவும் வேண்டுமானால் வட மாநிலங்களில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை, தென் மாநிலங்களான தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் விளையாட்டு மைதானங்களுக்கு மாற்ற பரிசீலனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோரிக்கையையும் வங்கதேச அணி நிர்வாகம் ஏற்க மறுத்துள்ளது.
அண்மையில் நடந்த ஆசிய கோப்பையிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் நட்புரீதியில் வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வும் நடக்கவில்லை. அதே போன்று கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோப்பை வந்து சேரவும் இல்லை. அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தூக்கி சென்ற சர்ச்சை நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து விளையாட்டில் அரசியலை கலந்து, மத ரீதியான சாயத்தையும் பூசி விளையாட்டை பகைமையாக மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாகவே இந்த நிகழ்வும் தற்போது பார்க்கப்படுகிறது.
Also Read
-
“சென்னை சங்கமத்துடன் சேர்ந்து இதுவும் நடக்கும்...” - கனிமொழி எம்.பி. சொன்னது என்ன?
-
“அரசின் லேப்டாப்பை பயன்படுத்தி ஆண்களைவிட அதிகமாக பெண்கள் சாதனைகளை படைக்க வேண்டும்” - துணை முதலமைச்சர்!
-
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு & சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கைகள்... வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 3-வது லட்ச நபர்... பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் !
-
ரூ.80.62 கோடி செலவில்... ஆவின் நிறுவனத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு... - விவரம்!