Sports
" விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும்" - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கருத்து !
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென இந்த உலகக்கோப்பை தொடரோடு டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.
அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகினார்.
கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
இதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்காக கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகினார். இந்த நிலையில் , விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துள்ளார். விராட் கோலி எப்போதும் வெளிநாடுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
அதேபோல் விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவர் பேட்டிங்கிலும் உச்சத்தில் இருந்தார். வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து போராடினார். விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலகியதில் இருந்து அவரின் பேட்டிங் சராசரி குறைந்தது என்பதையும் நாம் மறுக்கக்கூடாது. இதனால் அவர் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியிருக்க கூடாது, அந்த பொறுப்பில் தொடர்ந்திருக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”நெல் கொள்முதலில் தமிழ்நாடு அரசு சாதணை” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!