Sports

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதை பிரிஜ்பூஷன் தடுக்கிறார் : மல்யுத்த வீராங்கனை பகிரங்க குற்றச்சாட்டு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் வைத்துக் கடந்த மே மாதம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் நமது நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியபோது கூட இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

மேலும் போலிஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்த்தது பாஜக அரசு. தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து தாங்கள் வென்ற பதக்கங்களைக் கங்கையில் ஆற்றில் வீசுவதற்காகச் சென்றனர். அப்போது அவர் விவசாயச் சங்கத் தலைவர்கள் சமாதானப்படுத்தி அவர்களது பதக்கங்களை வாங்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து டிச.21-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலின் பிரிஜ் பூஷன் சிங்கின் உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றிபெற்றார். இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் இனி மல்யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்தார். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாத் ஆகியோர் தங்கள் அர்ஜுனா மற்றும் பத்ம விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதை பிரிஜ்பூஷன் சிங் திட்டமிட்டு தடுப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதில் பங்கேற்க விளையாட்டுத்துறை தனது பயிற்சியாளருக்கும், மருத்துவ உதவியாளருக்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று வினேஷ் போகத் கூறியுள்ளார்.

இதற்கு பிரிஜ் பூஷன் சிங் காரணமாக உள்ளதாகவும், திட்டமிட்டு இந்த செயலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் கொடுத்ததற்காக தான் பழி வாங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தினேஷ் போகத் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முன்னணி மல்யுத்த வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நெருங்கிய உறவினரால் ஏமாற்றப்பட்ட பாண்டியா சகோதரர்கள் : 4.3 கோடி மோசடி புகாரில் உறவினர் கைது !