Sports

ஆஸி. அணியை முதல் முறையாக வீழ்த்திய இந்தியா - வரலாற்று சாதனையை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3ஒருநாள் மற்றும் 3டி20போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளிடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 219 ரன்களுக்குள் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா அசத்தலால் இந்தியா 406 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தியாவின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தாலும், 2வது இன்னிங்சில் 261 ரன்கள் எடுத்தனர்.

75ரன்கள் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2இன்னிங்சையும் சேர்த்து இந்தியா சார்பில் ஸ்னே ரானா 7விக்கெட்டுகளும், பூஜா வஸ்ட்ரகர் 5விக்கெட்டுகளும் எடுத்தனர். தனது 2வது டெஸ்ட் போட்டியில் 7விக்கெட்டுகளை எடுத்த ஸ்னே ரானா ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் முறையாக இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

Also Read: கணிப்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழை : இந்திய வானிலை மையத்தின் தவறு என்ன ? முழு விவரம் உள்ளே !