இந்தியா

கணிப்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழை : இந்திய வானிலை மையத்தின் தவறு என்ன ? முழு விவரம் உள்ளே !

கணிப்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழை : இந்திய வானிலை மையத்தின் தவறு என்ன ? முழு விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்பட்டது. இந்த புயல் டிசம்பர் 5 அன்று பகல் வேளையில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. ஆனால், அதற்கு முன்னர் சென்னை கடற்கரையின் அருகே தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்தது. டிசம்பர் 3-ஆம் தேதி இரவில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவு பதிவாகியது.

இதனால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனினும் இந்த மழைக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு அமைத்திருந்த மழைநீர் வடிகால் அமைப்பு இந்த அதிகனமழையால் ஏற்படவிருந்த பேரழிவை தடுத்தது. அதே நேரம் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் தீவிர செயல்பாடு காரணமாக இந்த புயல், பெருமழை பாதிப்பில் இருந்து சென்னை ஒரே வாரத்தில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.

அதனைத் தொடர்ந்து குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவிய காற்று கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ம், தேதி அன்று இதுவரை இல்லாத அளவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ரயில் பாதைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

cyclone michaung
cyclone michaung

இவ்வாறு குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இந்த மழை குறித்த கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்காததே இத்தகைய பேரழிவுக்கு காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் “வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட அறிவிப்பைவிட அதிக அளவு, இதுவரை வரலாற்றில் பார்க்காத அளவுக்கு மழை பெய்திருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் மனோ தங்கராஜும், " வானிலை ஆய்வு மையம் சரியான கணிப்பை கொடுத்து ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் வெள்ளப்பெருக்கு தொடங்கிய நேரத்துக்கும் இடையிலான காலஅவகாசம் மிகவும் குறைவாக இருந்தது" என்று குற்றம் சாட்டியிருந்தார். அதே போல தமிழ்நாடு தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவும் "வானிலை ஆய்வு மையம் கணித்த மழை அளவைவிடப் பல மடங்கு அதிகமாகப் பெய்தது" என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு குறித்து பெரும் கேள்விகள் எழுகிறது. இந்திய வானிலை மையத்தின் கணக்கீட்டின் படி ஒரு இடத்தில் 7 செ.மீ முதல் 11 செ.மீ வரையிலான மழை பெய்ய வாய்ப்பிருந்தால் கன மழைக்கான மஞ்சள் அலர்ட்டும், 12 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 20 செ.மீக்கும் மேலாக அதி கன மழை பெய்யும் என்றால் அதற்கு ரெட் அலர்ட்டும் வழங்கப்படும். ஆனால், அதற்கு மேல் மழை பெய்தால் அதற்குரிய எந்த எச்சரிக்கை அமைப்பும் இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இல்லை.

கணிப்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழை : இந்திய வானிலை மையத்தின் தவறு என்ன ? முழு விவரம் உள்ளே !

அதாவது கடந்த டிசம்பர் 18-ம் தேதி தென்மாவட்டங்களில் கிட்டத்தட்ட 90 செ.மீக்கும் அதிக மழை பெய்தது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு விடுத்த எச்சரிக்கை என்ன என்றால் 20 செ.மீக்கும் மேலாக அதி கன மழை பெய்யும் என்றுதான். ஆனால், அவர்களின் கணிப்புக்கு மாறாக நான்கு மடங்கு அளவுக்கு மழை பெய்துள்ளது.

இதே போல சென்னையில் டிசம்பர் 3-ம் தேதி இரவில் இருந்து 4-ம், தேதி காலை வரை 30 செ.மீக்கும் அதிக மழை பெய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரம் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இணையதளத்தில் 20 செ.மீக்கும் மேலாக அதி கன மழை பெய்யும் என்று மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 20 செ.மீக்கும் மேலாக அதி கனமழை பெய்த நிலையில், அப்போது கூட 20 செ.மீக்கும் மேலாக அதி கன மழை பெய்யும் என்றுதான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் மட்டும் மொத்தம் 53.1 செ.மீ மழை பதிவாகியது. இந்த அளவு கனமழை குறித்து முன்பே வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தால் அதற்கு ஏற்ப அரசும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கும். ஆனால், இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறாகியது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது இப்படி இருக்க அடுத்த 15 நாட்களில் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை குறித்தும் சரியான கணிப்புகளையும் வெளியிட வானிலை ஆய்வு மையம் தவறியுள்ளது.

இங்குதான் வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு என்று இதுவரை தனியான கணிப்பு முறை ஏதும் அமைக்கப்படவில்லை. மேற்கத்திய (அமெரிக்க, ஐரோப்பிய) Global Forecast System என்னும் கணிப்பு முறையை தான் இந்திய வானிலை மையம் பின்பற்றி வருகிறது. மேற்கத்திய கணிப்பு முறை அந்தந்த நாடுகளுக்கு சரியாக இருந்தாலும், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு அது துல்லியமாக இருக்காது. எனவே இந்தியாவுக்கு என்று தனியே ஒரு கணிப்பு முறையை உருவாக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கணிப்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழை : இந்திய வானிலை மையத்தின் தவறு என்ன ? முழு விவரம் உள்ளே !

இந்தியாவின் வங்கக்கடல் பகுதியானது உலகில் அதிகளவில் புயல்கள் உருவாகும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் குறைந்தது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் புயலாவது உருவாகிறது. இந்த புயல்களில் பெரும்பாலானவை இந்தியாவின் கிழக்கு கடலோர பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்திய வானிலை மையம் சார்பில் இந்த புயல்கள் குறித்தும், இந்த புயல்கள் உருவாகும் வடகிழக்கு பருவக்காற்று குறித்தும் போதிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக கடலில் வெப்பம் அதிகரிக்கும் 'எல் நினோ' குறித்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் நடந்துவரும் நிலையில், தனது கணிப்புகளில் அதனை இந்தியா வானிலை மையம் எடுத்துக்கொண்டதா என்பதே கேள்விக்குறிதான். அதிலும் 2024-ம் ஆண்டில், தீவிர ‘எல் நினோ’ விளைவு வரப்போகிறது என பல மாதங்களாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

இது போன்ற ஆய்வுகளை அடிப்படையாக வைத்து கணிப்புகளை வெளியிட்ட ECMWF என்ற வானிலை மாதிரி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் 100 செ.மீ மழை பெய்யும் என்று ஏறத்தாழ சரியாக கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையை எந்த கணிப்பாலும் துல்லியமாக கணிக்கமுடியாது என்றாலும், அதில் 70% இருந்து 80% வரை சரியான கணிப்பு இருந்தாலே அதன்மூலம் பெரும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். ஆனால், இந்திய வானிலை மையத்தின் கணிப்பானது 50%-க்கும் குறைவாக இருந்ததே சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட நிலைமையை மோசமாக்கியது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் 24 மணி நேரங்களில் 95 செ.மீ மழை பெய்தது. பாளையங்கோட்டையில் முன் எப்போதும் இல்லாத அளவாக 44.2 செ.மீ மழை பதிவானது. டிசம்பர் 18-ம் தேதி மட்டும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 35 செ.மீ-க்கும் மேல் மழை பதிவானது. இந்த கனமழை அடுத்த இரண்டு நாட்களும் தொடர்ந்தது.

இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டிலும் சென்னையில் இவ்வாறு 40 செ.மீ-க்கும் அதிகமாக மழை பெய்தது. ஆனால், அப்படி இருந்தாலும் இந்திய வானிலை மையம் 20 செ.மீ மழை என்ற கணிப்பை மாற்றமுடியாது என்றே செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு என்றோ, அல்லது கிழக்கு கடலோர மாநிலங்களுக்கு என்றோ தனியாக வானிலை மையத்தை உருவாக்க வேண்டும் என்பதே தீர்வாக இருக்கும்.

Related Stories

Related Stories