Sports
"இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதை விட வேறு எதுவும் மன நிறைவை கொடுக்காது" - ஆஸ். கேப்டன் கருத்து !
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிபோட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .
இந்த தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் 10 தொடர் வெற்றியுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே நேரம் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலிய அணி அடுத்த 8 போட்டிகளில் அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை இந்தியா 4-வது முறையும், ஆஸ்திரேலியா 8-வது முறையும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது .
இந்த நிலையில், மைதானத்தில் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " நாளை அகமதாபாத் மைதானத்துக்கு வரும் 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஒரு சார்பானவர்கள். அவர்கள் இந்திய அணியை தான் ஆதரிப்பார்கள். விளையாட்டை பொறுத்த வரை எதிரணிக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்களை அமைதியாக்குவதை விடவேறு எதுவும் மன நிறைவை கொடுக்காது. அதனை நிறைவேற்றுவதே எங்களின் இலக்கு .
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறந்த ஆட்டத்தை விளையாடி வருகிறது. எங்கள் அணியில், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோரின் தொடக்க ஸ்பெல் எங்களுக்கு மிகமுக்கியமானதாக இருக்கும். இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிதாக நிறைவான வெற்றியை பெறவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கடினமான சூழலில் சிக்கிக் கொண்டு, கடைசி கட்டத்தில் வெற்றிபெறுவதற்கான வழியை கண்டறிந்து வென்றுள்ளோம். ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் முன் நின்று வழிநடத்தி இருக்கிறார். அதனால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?