Sports

"பென் ஸ்டோக்ஸ் சுயநலக்காரர், பிற வீரர்களின் வாய்ப்பை பறித்துள்ளார்" - ஆஸ். முன்னாள் கேப்டன் விமர்சனம் !

32 வயதான இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அவர், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.இதனிடையே இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அதில் பென் ஸ்டோக்ஸ் இருக்கவேண்டும் என ஒருநாள் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வேண்டுகோள் விடுத்தார். அதோடு இங்கிலாந்து வாரியத்தின் சார்பில் பென் ஸ்டோக்ஸிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இதன் காரணமாக அவர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், அதற்கான வீரர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மிகவும் சுயநலமாக நடந்து கொள்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஒருநாள் போட்டி ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் செயல் நான் பெரிய முக்கியமான போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என்பதுபோல் இருக்கிறது. உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் பலர் ஓராண்டு காலமாக விளையாடி வருகின்றனர்.அவர்கள் தற்போது பென் ஸ்டோஸுக்கு வழிவிட்டு வெளியில் உட்கார வேண்டும்.

பென் ஸ்டோக்ஸ் மிகவும் சுயநலமாக நடந்து கொள்கிறார். ஹாரி ப்ரூக்கின் இடம் பென் ஸ்டோக்ஸுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டிகளில் பந்துகள் அடிப்படையில் வேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர். அவர் 1,058 பந்துகளில் 1000 ரன்கள் எடுத்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், அவர் பென் ஸ்டோக்ஸ்க்காக அணியில் சேர்க்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: FIFA மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-ம் இடம் பிடித்த ஸ்வீடன்.. நாளை இறுதிப்போட்டி !