Sports

ஒரே நாளில் 389 ரன்கள் விளாசிய இங்கிலாந்து.. வெற்றியை நெருங்கிய ஆஸ்திரேலியா.. பரபர கட்டத்தில் ஆஷஸ் !

டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி திரில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் பரபரப்பானது. பின்னர் நடைபெற்ற நான்காவது ஆஷஸ் போட்டியில், இறுதி நாள் முழுக்க மழை பெய்த காரணத்தால் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதனால் ஆஷஸ் தொடர் 2-1 என்ற கணக்கில் இருந்த நிலையில், மீதம் ஒரு போட்டியே மீதம் இருக்கும் நிலையில், அதை வெல்வது யார் என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து பரபரப்பான ஆஷஸ் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 295 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன. அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பாஸ்பால் முறையில், ஒரே நாளில் 389 ரன்களை விளாசி அதிரவைத்தது. மொத்தமாக அந்த அணி 81.5 ஓவர்களில் 395 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு நாள் ஆட்ட பணியில் 4.86 ரன்ரேட்டில் இந்த ஸ்கோரை குவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 249 ரன்களே தேவைப்படும் நிலையில், இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Also Read: ஒரே போட்டியில் உலக சாதனை செய்த இந்திய வீரர்.. மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. முழு விவரம் என்ன ?