Sports

சச்சினின் அந்த அதிரடி ஆட்டத்தை மறக்க முடியுமா ? -ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சினுக்கு கெளரவம் !

இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். 16 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அதன் பின்னர் செய்தது எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.

அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.

அப்படி பட்ட சாதனைகளை கொண்ட சச்சின் டெண்டுல்கர் தனது 48 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்திய கிரிக்கெட்டுக்கு உலகளவில் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள சச்சினுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன.

அவரின் இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் மேற்கு ஸ்டாண்ட்க்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் என பெயரிடப்பட்டு அவருக்கு கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

1998-ம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சச்சின் அதிரடியாக 143 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்ததை எந்த சச்சின் ரசிகனும் மறந்திருக்க முடியாது. அந்த போட்டியை நினைவுகொள்ளும் வகையிலும் இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள சிட்னி மைதானத்தின் வாயிலுக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாராவின் பெயர் சூட்டப்பட்டு சச்சினுக்கு கெளரவம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: “CSK-வுக்கு வந்ததும் ரஹானே சிறப்பாக ஆடக் காரணம் என்ன” ? -தோனியின் பதில் என்ன ?