Sports

"இவர் தனித்து தெரிகிறார், விரைவில் டாப் பிளேயராக வருவார்"- கவாஸ்கர் பாராட்டிய தமிழக வீரர் யார் தெரியுமா ?

நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை ஆடினர். அதிலும், இவர்கள் அதிரடியால் தமிழ்நாடு அணி அருணாச்சலபிரதேச அணிக்கு எதிராக உலகசாதனை படைத்தது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற அருணாச்சலபிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தமிழ்நாடு அணி சார்பில் களமிறங்கிய தொடக்கவீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் அருணாச்சலபிரதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

ஆட்டம் முழுக்க சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறந்தது. தொடக்கவீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அதிரடி சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து இந்த ஜோடி பிரிந்தது. சாய் சுதர்சன் 102 பந்துகளில் 154 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள் அடித்து 277 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த அதிரடி காரணமாக தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்தது. இதன்மூலம் முதல் தர 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற உலகசாதனையை தமிழ்நாடு அணி படைத்தது. இந்த தொடரில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 3 சதங்களோடு 610 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடம் பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்ற வரும் நிலையில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் சுதர்சன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சக வீரர் விஜய் சங்கரோடு இணைந்து சரிவில் இருந்து குஜராத் அணியை மீட்டதோடு இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அந்த போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்த சாய் சுதர்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அவரை பல்வேறு தரப்பினரும் புகழ்ந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் சாய் சுதர்சன் இதர வீரர்களிடமிருந்து அவரை தனித்துவமாக தெரிகிறார் என்றும் அவர் டாப் பிளேயராக விரைவில் வருவார் என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், "சவாலை எதிர்கொள்வதற்கு சாய் சுதர்சன் தயாராக இருக்கிறேன் என்பதை நோர்க்யா பந்துவீச்சை எதிர்கொண்ட போதே தெரிந்தது. முதலில் நோர்க்யாவின் வேகத்தை தம்மால் அடித்து நொறுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொண்ட அவர் நோர்க்யா 2வது முறை பந்து வீச வந்த போது 2 சிக்ஸர்கள் அடித்தார். அது தான் சாதுரியமான கிரிக்கெட்டாகும். அந்த சமயத்தில் போட்டியை சரி செய்ய வேண்டிய நிலைமைக்கு தகுந்தாற்போல் அவர் விளையாடினார்.

”பொதுவாக டி20 கிரிக்கெட்டில் அனைவரும் மேலே தூக்கி அடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சாய் சுதர்சன் பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு முன்பாக நீங்கள் சில அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என காட்டினார். அந்த வகையில் அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. நல்ல ஃபீல்டராக இருப்பதும் அவருடைய கூடுதல் பலமாகும். அதைவிட அவரிடம் இருக்கும் பொறுமை இதர வீரர்களிடமிருந்து அவரை தனித்துவமாக காட்டுவதாக நான் நம்புகிறேன். எனவே அவர் டாப் பிளேயராக விரைவில் வருவார்" எனக் கூறியுள்ளார்.

Also Read: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. மும்பை மைதானத்தில் தோனிக்கு நினைவிடம்.. சரித்திர சிக்ஸருக்கு கெளரவம் !