Sports

"IPL-ஐ விட உலகக்கோப்பை தொடரே முக்கியம்" -இந்திய மகளிர் அணியின் கேப்டன் தடாலடி பதில் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சி.ஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் அனைத்து ஆட்டங்களும் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமையை வயகாம் 18 நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள நிலையில் உலகளவில் அதிக மதிப்புடைய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடராக மகளிர் ஐபிஎல் மாறியுள்ளது.

போட்டிகளை மார்ச் முதல் வாரத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வரும் நிலையில் வீராங்கனைகள் ஏலம் வரும் 13-ந்தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மகளில் ஐபிஎல் ஏலத்துக்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதனால் ஐபிஎல் ஏலம் காரணமாக வீராங்கனைகள் கவனம் சிதறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்வியை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, " ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் நடைபெறவுள்ளது. இதனால் எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்" எனக் கூறினார்.

மேலும் மகளிர் ஐபிஎல் தொடர்பாக பேசிய அவர், " பெண்கள் ஐபிஎல் தொடருக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்" என்று கூறினார்

Also Read: ஆஸ்திரேலிய வீரர்களை கனவிலும் பயமுறுத்தும் அஸ்வின்.. இந்திய மண்ணில் அசரவைக்கும் தமிழக வீரரின் ரெகார்ட் !