Sports

"நான் 200 அடித்து இருக்கலாம்,, ஆனால் அதற்கு காரணம் கோலியின் இந்த ஐடியாதான்" -இஷான் கிஷன் பாராட்டு !

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் காயம் காரணமாக அணியின் இருந்து விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷன் களமிறங்க கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடர்க வீரர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலியும், இஷான் கிஷனும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிலும் இஷான் கிஷன் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு உறுதுணையாக கோலியும் சிறப்பாக ஆடிய நிலையில் இந்த ஜோடி வங்கதேச பந்துவீச்சை எளிதாக சமாளித்து சிதறடித்தது.

அறிமுக ஒருநாள் போட்டியில் சதமடித்த இஷான் கிஷன் அடுத்தடுத்தும் தனது அதிரடியைத் தொடர்ந்து இரட்டை சதம் விளாசி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச அரங்கில் தனது 72-வது சதத்தை பதிவு செய்து 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அவருக்கு பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 37 ரன்கள் குவிக்க இந்திய அணி 400 ரன்களை தாண்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 6 -வது முறையாக 400 ரன்களை தாண்டி அதிகமுறை 400 ரன்கள் குவித்த தென்னாபிரிக்க அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் பேசிய இஷான் கிஷன், 200 ரன் அடிக்க காரணமாக இருந்ததே மூத்த வீரர் விராட் கோலிதான் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "சதம் அடித்தபின் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று துடிப்புடன் இருந்தேன். ஆனால் இது எனது முதல் சதம் என்பதால் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி எந்த பவுலரை டார்கெட் செய்ய வேண்டும் என்று எனக்கு விராட் கோலி அறிவுறுத்தினார். பின்னர் 180 ரன்களை கடந்தபின் நானே நேரடியாக விராட் கோலியிடம் சென்று, என்னை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இறங்கி அடிக்க நினைத்து அவுட் ஆகி விடுவேன் என சொன்னதற்கு எந்த பந்தை அடிக்க வேண்டும்? யாரை பவுண்டரி அடித்தால் சரியாக இருக்கும்? என்று கூறி என்னை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டார்" எனக் கூறியுள்ளார்.

மேலும், " இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் என்னை மீண்டும் நிரூபிப்பதற்கு காத்திருக்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.

Also Read: உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து ஓய்வு பெறப்போகிறாரா நெய்மர் ? உருக்கமாக பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி !