Sports

மரணம் வாழ்வின் அங்கம்,அதை பேசவேண்டாம்- தொழிலாளர் இறப்பு குறித்து கத்தார் உலகக்கோப்பை தலைவர் கொடூர கருத்து

கால்பந்து உலகக்கோப்பை தொடர் தற்போது கத்தாரில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

மேலும், இந்த தொடருக்கான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் சுரண்டலுக்கு ஆளானதாகவும்,அதில் பலர் போதிய பணி பாதுகாப்பு இல்லாமல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 6000 தொழிலாளர்கள் கட்டுமான பணியின்போது உயிரிழந்ததாக தி கார்டியன் பத்திரிகை அறிக்கை வெளியிட்டு அதிரவைத்தது.

இந்த நிலையில், கத்தார் உலகக்கோப்பை கமிட்டித் தலைவர் நாசர் அல் காதர் செய்தியாளர்கள் சந்தித்தார். அவரிடம் கட்டுமான பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஏன் எப்போதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுப் பாலினர்கள் விவகாரத்தை மட்டுமே கொண்டு வருகிறீர்கள்?

வெற்றிகரமான உலகக்கோப்பை நடந்துகொண்டிருக்கும்போது இந்த விஷயங்களைப் பேச வேண்டுமா? ஒரு தொழிலாளர் இறந்துள்ளார், அவரது குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இதை ஏன் முதல் கேள்வியாக கேட்கவேண்டும்? மரணம் என்பது வாழ்வின் இயற்கையான அங்கம். மரணம் வேலை செய்யும் இடத்தில் நிகழ்ந்தாலும் நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்தாலும் மரணம் வாழ்வின் இயற்கையின் ஓர் அங்கம்" என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இலக்கை மரணமும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் அவர்களை சாகவிட்டதும் ஒன்றா சிலசமூக வலைத்தளத்தில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கத்தார் அரசு சார்பில் ஏற்கனவே 300 முதல் 400 தொழிலாளர்கள் கட்டுமான பணியின்போது உயிரிழந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Also Read: நீ இனி அணிக்கு தேவையில்லை.. ரொனால்டோவை வெளியே அமரவைத்த போர்ச்சுகல்.. முடிவுக்கு வருகிறதா சகாப்தம் ?