Sports

"அவர் மூன்றுவித போட்டிக்கான வீரர், டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கவேண்டும்"-இளம்வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி!

சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். நெதர்லாந்து அணியுடனான போட்டியில் சூரியகுமாரின் அதிரடி ஆட்டமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.

தனது சிறப்பான ஆட்டத்தின்மூலம் டி20 தரவரிசை பட்டியலில் 3ம் இடத்தில் நீடிக்கிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோதிய இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் இவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதன் பிறகு டெஸ்ட் அணியில் சூரியகுமார் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், சூரியகுமார் மூன்றுவித போட்டிகளுக்கான வீரர்' அவரை சீக்கிரம் டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கி பயன்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், "டெஸ்ட் போட்டிகளைப் பற்றி பேசும்பொழுது சூரியகுமார் பெயர் அடிபடாது என்று எனக்கு தெரியும். ஆனால் இவர் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடுவார். ஐந்தாவது இடத்தில் களமிறங்கி கலக்கி இந்திய அணிக்கு வெற்றிகளை குவிப்பார். சில போட்டிகளில் மிடில் ஆர்டர் பல அதிசயங்களை நிகழ்த்த கூடியவர்." என்று கூறியுள்ளார்.

Also Read: "அணியின் எதிர்காலம் எப்படி என்றே தெரியவில்லை, வருத்தத்தில் உள்ளோம்"-மனம் திறந்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் !