Sports

”சூர்யகுமாரை NEW BAll-ல் இருந்து காப்பாற்றவேண்டும் ”.. ரிக்கி பாண்டிங் கருத்துக்கு காரணம் என்ன?

இந்திய அணியின் சர்வதேச டி20 பேட்டிங் லைன் அப்பில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஆர்டர் எப்போதுமே சந்தேகத்துகு உரியதாக இருந்ததில்லை. கேப்டன் ரோஹித் ஷர்மா, துணைக் கேப்டன் விராட் கோலி போன்றவர்கள் ஆடும்போது பொதுவாக அவர் நான்காவது வீரராகக் களமிறங்குவார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த பொசிஷனில் தான் அவர் அதிக முறை களமிறங்கியிருக்கிறார். விளையாடிய 15 போட்டிகளில் 6 முறை அவர் நான்காவது வீரராகத்தான் களமிறங்கினார். அந்தப் போட்டிகளில் 199 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 195 ரன்கள் விளாசினார் அவர். ஒரு போட்டியில் சதமும் அடித்து அசத்தினார்.

இருந்தாலும், அவருடைய சரியான பேட்டிங் பொசிஷன் எது என்பது இன்னும் விவாதமாகிக்கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஐந்து போட்டிகளிலுமே அவர் ஓப்பனராகத்தான் விளையாடினார். இந்த விவாதத்தில் இப்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்கும் இணைந்திருக்கிறார். சூர்யகுமார் யாதவின் சரியான இடம் என்ன என்பதைப் பற்றி தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பான்டிங்.

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் சூர்யகுமார் யாதவ் பற்றிப் பேசிய பான்டிங், அவரை வெகுவாகப் பாராட்டினார். அவர் டாப் ஆர்டரில் விளையாடவேண்டும் என்று கூறிய அவர், கடந்த சில தொடர்களில் மற்ற இந்திய வீரர்களை விடவும் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்று கூறியிருக்கிறார்.

"அவர் நிச்சயம் டாப் 4 பொசிஷன்களில் விளையாடவேண்டும். என்னைக் கேட்டால் விராட் கோலியை அவரது வழக்கமான இடத்தில் இருந்து மாற்றக்கூடாது என்று தான் சொல்வேன். அவர் மூன்றாவது வீரராகவே விளையாடவேண்டும். சூர்யகுமார் யாதவைப் பொறுத்தவரை அவர் ஓப்பனராகவோ இல்லை நான்காவது வீரராகவோ விளையாடவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவை புதிய பந்தில் இருந்து காத்து மிடில் ஓவர்களில் விளையாட வைப்பது சிறந்தது. ஏனெனில், பவர்பிளேவுக்குப் பிறகு ரன்ரேட் குறையும் அந்த மிடில் ஓவர்களில் களமிறங்கி, கடைசி வரை நின்றால் சூர்யாவால் என்ன செய்ய முடியும் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

டாப் 4 என்று சொல்லியிருந்தாலும் அவர் ஓப்பனிங் ஆடுவதை நான் உண்மையாக விரும்ப மாட்டேன். நான்காவது வீரராக விளையாடுவது தான் அவருடைய சிறந்த இடம் என்று நான் நினைக்கிறேன். அவருடைய ஆட்டத்தில் அவருக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. அவர் மீதும் அவருக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கிறது. அதுதான் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக்காட்டுகிறது.

சூர்யகுமார் யாதவால் டிவில்லியர்ஸ் தன்னுடைய உச்சபட்ச ஃபார்மில் இருக்கும்போது எப்படி ஆடினாரோ அதுபோல் 360 டிகிரியிலும் ஷாட்கள் அடிக்க முடியும். அந்த லேப் ஷாட்கள், லேட் கட்கள், கீப்பரின் தலைக்குப் பின்னால் அடிக்கும் அந்த ரேம்ப் ஷாட்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. அவரால் தரையோடு தரையாகவும் சிறப்பான ஷாட்களை அடிக்க முடியும்.

லெக் சைட் ஆடும் ஷாட்களை மிகவும் சிறப்பாக விளையாடுகிறார் அவர். குறிப்பாக பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்கும் ஃபிளிக் ஷாட்களை அற்புதமாக ஆடுகிறார். வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என அனைத்து விதமான பந்துவீச்சையும் சிறப்பாக கையாள்கிறார்" என்று சூர்யகுமார் யாதவை புகழ்ந்திருக்கிறார் ரிக்கி பான்டிங்.

Also Read: ஒரு முடிவால் பென் ஸ்டோக்ஸை இழந்த நியூசிலாந்து.. மாறிய உலகக்கோப்பை கனவு.. ராஸ் டெய்லர் வெளியிட்ட தகவல் !