Sports

ஒரு வீரருக்கு மட்டும் சிறப்பு இருக்கை.. செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் தமிழக அரசு செய்த ஏற்பாடு !

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செஸ் போட்டியில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்குகின்றன. அதில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்/வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர்.

இந்த போட்டியில் பெண்கள் சீனியர் பிரிவில் இருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் துரோணவள்ளி ஹரிகா (வயது31) தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தற்போது உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கிறார். இவர் தனது 9 மற்றும் 10 வயதிலே தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டங்களை வென்றார். கடந்த 2008 ஆம் ஆண்டு இவரது சாதனையை கெளரவிக்கும் விதமாக ஒன்றிய அரசு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்தது.

இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த செஸ் போட்டியில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்றதோடு, 2012, 2015, 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரிகா மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள இவருக்கு தமிழக அரசு போட்டியில் அமர்வதற்காக சிறப்பு இருக்கையை அமைந்து கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுக்கொடுத்துள்ளது.

Also Read: ஒரே குடும்பத்தில் நான்கு IAS அதிகாரிகள்.. விடாமுயற்சியால் அசத்திய சகோதர, சகோதரிகள்..