Sports

''சும்மா தோனி தோனின்னு கத்தாதீங்க'' : பிரஸ்மீட்டில் கொந்தளித்த விராட் கோலி - காரணம் என்ன?

இந்திய அணியின் மூத்த வீரர் தோனியின் இடத்தை நிரப்புவார் எனக் கூறப்பட்ட ரிஷப் பண்ட் சமீபகாலமாக தொடர்ந்து சொதப்பிய வண்ணம் உள்ளார். இவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு சஞ்சு சாம்சன் போன்றோருக்கு அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வங்கதேச தொடரில் கூட எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை பண்ட் கோட்டை விட்டார். இதையடுத்து, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "தோனி... தோனி" என்று கத்த ஆரம்பித்து விட்டனர். மேலும் தோனியை மீண்டும் அணிக்குத் தேர்வு செய்ய வலியுறுத்தி தங்களது கருத்துகளை இணையத்தில் பதிவிட்டனர்.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது, ரிஷப் பண்ட்டின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம். கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வீரரின் பொறுப்பு. அவருக்கு வாய்ப்பளித்து அவரை ஆதரிப்பது எங்கள் பொறுப்பு.

பண்ட் தவறுகள் செய்யும்போது மைதானத்தில் உள்ள ரசிகர்கள் “தோனி தோனி” என்று கத்த வேண்டாம். அது அவருக்கு மரியாதையாக இருக்காது.

மேலும் ஒரு இளம் வீரர் விளையாடும்போது அவரை ஆதரித்தால் அவருடைய திறன் பெருகும். அதனை விடுத்து “தோனி தோனி” என்று கத்துவதன் மூலம் அவரது திறன் வெளிப்படாமல் போக வாய்ப்பு உள்ளது.

எனவே பண்ட் தவறு செய்யும்போது கேலி செய்யாமல் தட்டிக்கொடுங்கள்; நிச்சயம் அவர் சிறந்த விக்கெட் கீப்பராக அவர் மாறுவார் எனத் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணி மோதும் முதல் T20 போட்டி ஐதராபாத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.

Also Read: தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு விராட் கோலி அளித்த அசத்தல் பதில்! - ரசிகர்கள் கொண்டாட்டம்!