Sports

“இன்னும் இரண்டே சதம்... சச்சினுக்கு அடுத்து நான்தான்” - கெத்து காட்டும் கோலி!

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர். இதனால் வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த புஜாராவும் கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடினர். இந்தப் போட்டியில் கோலி 32 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5,000 ரன்களை எட்டினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் கோலியின் 27வது சதம் இதுவாகும். இது சர்வதேச கிரிக்கெட்டில் (ODI, Test & T20) விராட் கோலியின் 70வது சதமாகும். மேலும், பிங்க் பந்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

இன்னும் 2 சதங்கள் அடித்தால் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதங்கள்) அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடுவார் கோலி.

மேலும் சில வரலாற்று சாதனைகளையும் படைத்துள்ளார் விராட் கோலி. இந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்தன் மூலம் இந்திய டெஸ்ட் கேப்டன்களில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி கேப்டனாக 10 சதங்கள் அடித்துள்ளார். சுனில் கவாஸ்கர் 9 சதங்களுடன் 2ம் இடத்திலும், மகேந்திர சிங் தோனி 5 சதங்களுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.

கேப்டனாக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை (41 சதங்கள்) சமன் செய்துள்ளார் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி, 20வது சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விராட் கோலி 136 ரன்களில் அவுட் ஆனார். தற்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.