Politics

ஜந்தர் மந்தர் - தலைநகரில் ஒலித்த எளிய மக்களின் குரல்.. இனி போராட அனுமதி இல்லை.. பாஜக அரசின் ஒடுக்குமுறை !

இந்தியாவின் முக்கிய போராட்டக் களமாக இருக்கும் ஜந்தர் மந்தரில் இனிமேல் போராட முடியாது என ஒன்றிய பாஜக அரசின் அறிவுறுத்தலின்படி டெலி காவல்துறை அறிவித்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் சில இடங்கள் வெறும் நிலங்களாக மட்டுமே இருப்பதில்லை. அவை மக்களின் கோபம், கண்ணீர், எதிர்பார்ப்பு, உரிமைக்கான போராட்டம் ஆகியவற்றின் அடையாளங்களாக மாறியுள்ளன.

டெல்லியில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்று. ஊழலுக்கு எதிரான போராட்டம் முதல் விவசாயிகள், தொழிலாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாணவர்கள், பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் உரிமைப் போராட்டங்கள் வரை பல்வேறு போராட்டம் குணம் ஜந்தர் மந்தருக்கு உண்டு என்றால் அதனை மறுக்க இயலாது.

இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதி, அதிகார மையத்தின் வாசலில் மக்களின் கோரிக்கைகளை ஒலிக்கச் செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

ஜந்தர் மந்தர் போராட்டக் களமாக உருவானதற்குப் பின்னால் டெல்லியின் அரசியல் வரலாறு உள்ளது. 1980-களில் இந்தியா கேட் அருகிலுள்ள போட் கிளப் பகுதி, மக்கள் போராட்டக் களத்திற்கான முக்கியப் பகுதியாக இருந்துவந்தது.

1988 அக்டோபர் மாதம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன்பின்னர் ஒன்றிய அரசு எடுத்த முடிவின்படி போட் கிளப் பகுதியில் பெரிய போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்காரணமாக தலைநகரில் மாற்றுப் போராட்ட இடம் தேவைப்பட்டது. அந்தச் சூழலில் 1993ஆம் ஆண்டு முதல் ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்கான முக்கிய இடமாக உருவெடுத்தது. நாடாளுமன்றத்துக்கு அருகில் அமைந்திருந்தாலும், பெரிய கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற இடமாக அது கருதப்பட்டது. இவ்வாறு நிர்வாகக் காரணங்களால் முக்கியத்துவம் பெற்ற இடம், நாளடைவில் மக்களின் எதிர்ப்புக் குரல்களின் அடையாளமாக மாறியது.

இந்திய அளவில் ஜந்தர் மந்தரைப் பிரபலப்படுத்திய மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்று அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்புப் போராட்டமாகும்.

2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஜந்தர் மந்தர் தேசிய அளவிலான மக்கள் இயக்கங்களின் மையமாக அறியப்படுவதற்கு இந்தப் போராட்டம் முக்கியக் காரணமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தார். நிர்பயாவுக்கு நீதி கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களில் ஜந்தர் மந்தரும் முக்கிய இடமாக விளங்கியது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் பின்னணியில் 2013ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த தேசிய அளவிலான விவாதத்தையும் இந்தச் சம்பவம் தீவிரப்படுத்தியது. இதுபோன்று தேசிய அளவிலான முக்கியப் பிரச்சனைகளில் ஜந்தர் மந்தர் போராட்டக் களம் மக்களின் மனதில் பதிந்தது.

குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக முன்வைத்த கோரிக்கைகளில் முக்கியமானது ஒரே பதவியில், ஒரே கால அளவு பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதாகும். இதுவே ஒரே பதவி – ஒரே ஓய்வூதியம் (One Rank One Pension - OROP) என்ற கோரிக்கையாக உருவெடுத்தது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2015-ஆம் ஆண்டு முன்னாள் ராணுவத்தினர் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம், தர்ணா உள்ளிட்ட போராட்ட வடிவங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை கவனம் பெற்றது.

ஜந்தர் மந்தர் வரலாற்றில் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கியமான போராட்டம் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகளின் பெரும் போராட்டமும் ஒன்று.

விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர். சுமார் 40 நாட்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் மண்டை ஓடுகளை ஏந்தியும், எலிகளை வாயில் வைத்தும், பல்வேறு நூதன முறைகளிலும் போராடினர். இது இந்தியா முழுமைக்கும் எதிரொலித்தது.

2016-ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வேமுலா உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகங்களில் சாதிப் பாகுபாடு, மாணவர்களின் உரிமைகள், உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு ஆகியவற்றை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஜந்தர் மந்தரிலும் மாணவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

2017ஆம் ஆண்டு பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக 'Not In My Name' என்ற பெயரில் நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன.

மதச்சார்பின்மை, குடிமக்களின் உயிர் பாதுகாப்பு, அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரிலும் மக்கள் திரண்டனர். இந்தப் போராட்டம் தேசிய அளவிலான விவாதத்தை கிளப்பியது.

2019-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒன்றிய பாஜக அரசின் முக்கியச் சட்டத்திருத்தமான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இந்தச் சட்டம் மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுக்கிறது என்றும், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானது என்றும் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரிலும் மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜந்தர் மந்தரின் சமீபத்திய போராட்ட வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட போராட்டங்களில் ஒன்று இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பாஜக-வைச் சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட சர்வதேசப் பதக்கம் வென்ற வீரர்கள் 2023 ஏப்ரல் 23ஆம் தேதி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணையை நியாயமாக நடத்த வேண்டும், விளையாட்டு வீராங்கனைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இருப்பினும் பிரிஜ் பூஷண் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இந்திய அளவில் பூதாகரத்தைக் கிளப்பிய இந்தப் போராட்டங்கள் பல வாரங்களாக நீடித்தது.

2023-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு நாளில் பேரணி செல்ல முயன்ற வீரர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரிலிருந்து அகற்றப்பட்டனர். இந்தச் சம்பவமும் ஜந்தர் மந்தர் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் அதிகரித்தபோது, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, ஒலி மாசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போராட்டக்காரர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் எழுந்தன.

2017ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), ஒலி மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அமைதியான போராட்டம் நடத்துவதற்கான உரிமை தொடர்பாகப் பிரச்சினை உருவானது.

பின்னர் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அமைதியாகக் கூடும் மக்களின் உரிமையை முழுமையாக மறுக்க முடியாது என்ற அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு போராட்ட உரிமை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவு கருத்துச் சுதந்திரத்தையும், 19(1)(b) பிரிவு ஆயுதமின்றி அமைதியாகக் கூடும் உரிமையையும் உறுதிப்படுத்துகின்றன என தெரிவித்தது.

2026 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து வெடித்த மாணவர் அதிருப்தி, நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான போராட்டமாக உருவெடுத்தது. சமூக வலைதளங்களில் நையாண்டியாகத் தொடங்கப்பட்ட "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இளைஞர் இயக்கம், பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்களை ஒன்றிணைத்து ஒன்றிய அரசுக்கு எதிரான பெரிய மக்கள் இயக்கமாக மாறியது.

ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம், மாணவர்கள் மீது போலீசார் தடியடி, நாடாளுமன்ற முற்றுகை முயற்சி, மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களைத் தாண்டி, போராட்டத்தின் வீரியத்தை அறிந்து அழுத்தம் தாங்காமல் இறுதியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இது ஒரு முக்கியப் போராட்டாம பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் SIR விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இரு தேர்தல் ஆணையர்கள், எதிர்ப்புத் தெரிவித்ததாக தகவல் வெளியானது. பல்வேறு முடிவுகளில் தலமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் இடதுசாரிகள் இந்தப்பிரச்சனையை கையிலெடுத்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்திய முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இது தற்போது வரை வீரியமாக உள்ளது.

குறிப்பாக கடந்த முறை ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் அதனால் எழுந்த எதிர்வினைகளை கணித்த ஒன்றிய பாஜக அரசு, போராட அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் டெல்லியில் மெட்ரோ ரயில்கள் முடக்கம், இணைய சேவை துண்டிப்பு, டெல்லி நகரம் முழுவதும் காவல்துறையினரை குவித்து கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் போராடிய மாணவர்கள், போராட்டக்காரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் தாக்குதலை தொடுத்தது டெல்லி காவல்துறை. முக்கியமாக பத்திரிகையாளர் உட்பட அனைவர் மீதும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்நிலையில்தான், ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்த குழுவின் பரிந்துரைப்படி டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக்களம் போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக டெல்லி காவல்துறை அறிவித்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகவே இருந்தது.

இந்தியாவின் தலைநகரில் 120 கோடி மக்களின் போராட்டக் குணத்தை ஒற்றுமையாக பிரதிபலித்த, அதற்கு பல்வேறு தீர்வுகளை கண்ட ஒரு இடம் இன்று போராட்டம் நடத்த முடியாது என்பது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவாலாகத்தான் உள்ளது.

Also Read: தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!