Politics

2 தொகுதி இடைத்தேர்தல்.. வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.. தொடங்கிய கவுண்டவுன்!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய 2 மாதங்களுக்குள்ளேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் அடுத்தடுத்து பதவி விலகியதோடு, தவெக-வில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்நிலையில் காலியாக உள்ள தேர்தல் வழக்குகள் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளைத் தவிர்த்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் கட்சியாக, திராவிட முன்னேற்றக் கழகம் 2 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளது.

அதன்படி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிக்கு வழக்கறிஞர் எஸ்.சுகன்யா ஆகிய இருவரையும் வேட்பாளாராக அறிவித்துள்ளது திமுக தலைமைக் கழகம்.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (செப்டம்பர் 9-ம் தேதி) தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளாகவும், வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப்பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அக்டோபர் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் பணிகளை திமுக சார்பில் தொடங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Also Read: ‘இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.. வேட்புமனுத் தாக்கல் முதல் முடிவுகள் தேதி வரை’ - முழு விவரம் அறிக!