Politics
“எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத த.வெ.க அரசைக் கண்டித்து அவையிலிருந்து தி.மு.க வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ‘’கோவையில் மாணவர் அமுதன் 10 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்துகின்ற கும்பலைப் பற்றி காவல்துறையிடம் விவரங்களையெல்லாம் கூறியதற்காக காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? சரியான நடவடிக்கை எடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.
விநியோகம் செய்யும் கும்பல் அந்த மாணவன் அமுதன் யார் மீது புகார் கொடுத்தாரோ, யார் போதைப்பொருள் கடத்துகிறார்கள், யார் விநியோகம் செய்கிறார்கள் என்று கூறினாரோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
அதற்கு மாறாக, அந்த போதைப்பொருள் விநியோகம் செய்கின்ற கும்பலை அழைத்து, ‘இந்த அமுதன்தான் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கொடுத்திருக்கிறார்’ என்று கூறியதனால், அந்த போதைப் பொருள் விநியோகம் செய்யும் கும்பல் திரு அமுதன் அவர்களைக் கிட்டத்தட்ட 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலாகச் சேர்ந்து அடித்து, 5 நாட்களுக்கு முன்பு படுகொலை செய்திருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி, நேற்று முன்தினம் திருவொற்றியூரில் இதேபோல தனுஷ் என்ற மாணவர், 20 பேரைக் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நாம் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியிருக்கிறோம். ஆனால், பழிபோடுகின்ற வழக்கம் கொண்டுள்ள இந்த அரசிடம், இதற்கெல்லாம் எந்தவிதமான ஒரு சரியான பதிலும் இல்லை.
மாறாக எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். உங்களது ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடுகின்ற வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி, நான் பலமுறை இந்த மூன்று மாதங்களாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே சரியாகத் தெரியவில்லை.
அதற்கு என்ன காரணம் என்றால், இந்த அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள். வெளிநடப்பு செய்திருக்கிறோம் இன்றைக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம், போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை. இதையெல்லாம் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
கேள்வி: மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துக்குவீங்களா?
பதில்: ஆம். மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொள்வோம்.
கேள்வி: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிடுகிறார்கள்னு சொல்றாங்க அதைப் பற்றி…
பதில்: முறையான பதில் வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதற்கான அமைச்சர்தான் வரவில்லையே? அமைச்சர்தானே எழுந்து பதில் சொல்ல வேண்டும்? சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் யார் என்பது மக்களுக்குத் தெரியும்.
கேள்வி: நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கானு கேட்கிறாரே?
பதில்: அந்த காணொலி எப்போது வெளியே வந்தது? ஒரு மாதத்திற்கு முன்னால் வந்தது. அப்படி காணொலி வந்தால், வந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியென்றால் இந்த அரசுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? அவரை அழைத்து விசாரித்தார்களா? அப்படியென்றால், அந்த அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா, அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா?
கேள்வி: அப்போ மைதானத்தைச் சுற்றிலும் காவல்துறை இருந்தது என்கிறாரே?
பதில்: அப்படியென்றால், அந்த அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா, அது போதைப் பொருள்தான் என்று ஒப்புக்கொள்கிறாரா? நான் என்ன சொல்கிறேன் என்றால், இந்த வீடியோ எப்போது வந்தது? இப்போது வந்தது வீடியோ, ஒரு மாதத்திற்கு முன்பு வந்தது. எனவே இந்த அரசு அவரை அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுடைய அரசாக இருந்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம். ஆனால் இந்த வீடியோ வெளிவந்ததே இப்போதுதான்.
இவ்வாறு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Also Read
-
“ஆதாரம் இருக்குதா?.. பொய் பேசக்கூடாது” - பேரவையில் தவெக அமைச்சர்களை வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“முதல்வர் விஜய்.. ஆட்சியை நடத்துங்கள்.. எதிர்க்கட்சியை கொச்சைப்படுத்தி காலத்தை ஓட்ட வேண்டாம்” - முரசொலி!
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!