Politics
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (ஆக.10) காரசாரமாக நடந்த விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் பேசிய கருத்து கடும் கண்டனத்திற்குரியதாய் மாறியுள்ளது.
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கான தீர்மானம் நிறைவேறிய பிறகு, சட்டப்பேரவையில் பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்,“தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருக்கலாம். ஆனால், அவரது தமிழ் உச்சரிப்பில் பல சொற்கள் விடுபட்டன.
பல இடங்களில் இலக்கண பிழைகளுடன் உச்சரிக்கப்பட்டன. தமிழ் அறிந்த அமைச்சர்கள், அவருக்கு உதவ வேண்டும். இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை” என மாண்போடு எடுத்துரைத்தார்.
அதற்கு அமைச்சர் மரிய வில்சன் இடைமறித்து, “இதுதான் என்னுடைய Unique; இப்படிதான் பேசுவேன்” என்று கறாராக விடையளித்தார்.
அவர் சொன்னது சரிதான், தமிழ்நாட்டில் அனைவரும் தமிழை சரியாக உச்சரிப்பதில்லை தான். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு தாய் மொழியாம் தமிழை பயிற்றுவிப்பதில் சற்று தயக்கம் காட்டி வருவதும் அதற்கு காரணமாய் அமைந்திருக்கிறது.
எனினும், அதனை அமைதியான முறையில், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன்வைத்த விதத்தில், விடையாக அளித்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அப்படி, கறாராக விடையளித்ததும் கடந்து செல்லக்கூடிய வகையில்தான் இருந்தது.
ஆனால், “அன்பு மொழி; அமைதி மொழி மற்றும் இரக்கத்தின் மொழி ஆகியவற்றை என் மதம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இது பாதி பேருக்கு, எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது” என அவர் பேசியதை தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாலும், தமிழுக்கு தொண்டாற்றுபவர்களாலும், தமிழ்நாட்டை தாயிடமாகக் கொண்டவர்களாலும், தமிழ் பேசும் நல் உள்ளங்கள் எவராலும் எளிதில் கடந்துவிட முடியாது.
இறை நம்பிக்கை வேறு, மதத்தின் மீதான பற்றுதல் வேறு, மொழிப் பற்றுதல் - மொழி வல்லமை என்பது வேறு.
ஒரு மதத்தை, இன்னொரு மதத்துடன் ஒப்பிடுவதும்; ஒரு மதத்தை வைத்து ஆதிக்கம் செலுத்த, பிற மதங்களை நசுக்குவதும் எவ்வாறு சரியாக இருக்காதோ... எவ்வாறு வல்லாதிக்கத்திற்கு வழி வகுக்குமோ... அதுபோல்தான், அமைச்சர் மரிய வில்சனின் பேச்சும் அமைந்திருக்கிறது.
இங்கு, இந்த மதம் இதனை சொல்லிக்கொடுக்கிறது என்று சொல்வது எந்த வகையிலும் தவறில்லை. ஆனால், தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வதற்காக, உலகளவில் பெரும் சிறப்பிற்குரிய தமிழை இழிவுபடுத்தும் வகையில், “தமிழ் எவ்வளவு படித்தாலும் மாண்பை கற்றுக்கொள்ள முடியாது” என பேசுவது, அமைச்சரின் அறியாமையை தெளிவாக வெளிக்காட்டுகிறது.
அன்பு, அறம், அமைதி, அறிவியல் என வாழ்வியலுக்கு தேவையான அனைத்தையும் தமிழில் நாம் காணலாம். தமிழை ஆழமாக கற்க, கற்கத்தான் இதனை உணரமுடியுமே தவிர;
கறாராக பேசுவதனால் மட்டுமே தமிழின் பெருமையை கற்றுக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியாது.
அதற்கு எடுத்துக்காட்டாக, சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை படிக்கும்போது, நம் கண்முன் இருக்கிற, தமிழர் பெருமையை பறைசாற்றுகிற ‘கீழடி’ நாகரீகம் குறித்து எடுத்துரைக்காமல் மேலை நாடுகளை சுட்டிக்காட்டிய மரிய வில்சனின் பேச்சு அமைந்திருக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, தமிழை இழிவுபடுத்தக்கூடிய கருத்தை, மரிய வில்சன் என்னும் தனிநபர் ஏதோ பொதுவெளியில் பேசிச் சென்றிருந்தாலும், அதனை பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கலாம்;
ஆனால், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு துறையை வழிநடத்தும் ஒரு அமைச்சர், நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில், இவ்வாறு பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் எள்ளி நகையாடுவது போன்றது.
தமிழ் மொழி மட்டுமே அறிந்த லட்சக்கணக்கானோர் வாக்களித்ததால்தான், இந்த அமைச்சர் பதவியே மரிய வில்சனுக்கு வந்திருக்கிறது என்பதை அவர் விரைவில் உணரவில்லை என்றால், மக்கள் மனங்களில் இருந்தும், சட்டப்பேரவையில் இருந்தும் அவர் தூக்கி எறியப்படுவார் என்பது தவிர்க்க முடியாதது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!