Politics

“ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” : தி.மு.க கடும் கண்டனம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பல, இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதனால், திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கிய பல திட்டங்களை, வெட்டி - ஒட்டி வரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது த.வெ.க அரசு.

போக்குவரத்துத் துறையின் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம், இதர அரசு வாகன சேவைகள் தொடக்கம் உள்ளிட்ட பலவற்றை, ஏதோ தாங்கள்தான் செய்ததுபோன்று காட்சிப் படுத்தி வருகிறது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம்; முதல்வர் படைப்பகத்தில், ‘முதல்வர்’ என்ற பெயர் நீக்கம் உள்ளிட்டவையும் இதனுள் அடங்கும்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகை, முதல்வர் விஜய் பார்வையிட வருவதற்காக, குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதாக பொறிக்கப்பட்டிருந்த தடையத்தை, நீக்கியுள்ளது த.வெ.க அரசு.

இதற்கு கண்டனம் தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு,

“சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது.

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார்.

2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி;

தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு.

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது.

முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?”

தி.மு.க.வின் பதிவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டளவில் விஜய் அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

Also Read: “விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!