Politics

“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தவெக ஆட்சியமைத்த பின்பு சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. தினமும் விடியும் பொழுது குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெறாதா நாள் இருக்குமா? என்ற பயமே பொதுமக்களிடம் நிலவுகிறது. அந்தளவுக்கு தறிகெட்டுப் போய் உள்ளது மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை.

இதுகுறித்து முதலமைச்சர் விஜயோ வாய் திறந்து பேசுவாரா என எதிர்பார்க்கும் சூழ்நிலைதான் உள்ளது. ஏனென்றால் சட்டமன்றம் கூடி அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கேள்வி கேட்டால் கூட உள்துறையை கவனிக்கும் முதலமைச்சர் பதிலளிக்காமல் அமைதி காத்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது.

இதற்கிடையில் அதிர்ச்சி தரும் செய்தியாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை புறநகர் பகுதியில் 12 போக்சோ வழக்குகளும், மாநகர் பகுதியில் 5 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது

புறநகர் பகுதியில் உள்ள நெல்லை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 போக்சோ வழக்குகளும், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் சேரன்மகாதேவி மற்றும் நாங்குநேரி அனைத்து காவல் நிலையத்தில் தலா 2 போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளது. அதேபோல், மாநகர் பகுதியில் உள்ள பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு,நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 போக்சோ வழக்கும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 20 வயதுக்கு உட்பட்ட 3 இளைஞர்களும், 20 வயதுக்கு மேற்பட்ட 12 இளைஞர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு முதியவர்களும் கைது போக்சோ சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு மாவட்டத்தின் நிலை. மாநிலம் முழுவதும் உள்ள நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையென ஒன்று இயங்கி வருகிறது. இது வந்துவிட்டால் பெண்கள் மீதான வன்முறைகளும், சிறுமிகள் மீதான குற்றங்களும் குறைந்து பூஜ்ஜியமாகிவிடும் என்பதுதான் முதல்வரின் வாக்குறுதி. ஆனால் நிலைமையோ தலைகீழாக உள்ளது.

இதையெல்லாம் கவனிக்காத கண்டுகொள்ளாத முதலமைச்சர் விஜய் தினமும் போட்டோ ஷூட் நடத்துவதில் பிசியாகவும், அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை ஆட்டயப்போடுவதில் மிகவும் பிசியாகவும் இருந்து வருவதாக திமுக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

முதலமைச்சர் என்ற முறையிலும், காவல்துறையின் அமைச்சர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கே உள்ளது.

இது சினிமா இல்லை, டூப் போட்டு நடிக்க இது ரியல், இங்கு ரியலாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற விமர்சனங்களை முதலமைச்சர் காது கொடுத்து கேட்பாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: “ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!