Politics

“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!

இவரை ஆறு மாதம் வரை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும்? ஆறு மாதத்திற்குள் எத்தனை பாலியல் வன்கொடுமைகளைப் பார்க்க வேண்டும்? கொலை, கொள்ளைகளைப் பார்க்க வேண்டுமா? அரிவாள் வெட்டுகள், பெட்ரோல் குண்டுகளைப் பார்க்க வேண்டுமா? என முரசொலி நாளேடு தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நேற்று மட்­டும் எத்­தனை கொடூ­ரங்­கள்? என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

நேற்று ( ஜூன் 16) ஒரே நாளில் மட்டும் எத்தனை கொடுமைகள் நடந்துள்ளது தெரியுமா?

* கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

* தாம்பரத்தில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளார்.

* திருவள்ளூரில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்.

*சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளார்.

*பூந்தமல்லியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.

*கோயம்பேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது. அந்தப் பெண் கூச்சலிட்டதால் மர்ம நபர் ஓட்டம் பிடித்துள்ளார்.

*திருவண்ணாமலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் த.வெ.க. நிர்வாகி யோகேஸ்வரன். பொதுமக்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

* பெரம்பூரில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகேஷ் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இதுதான் விஜய் ஆளும் தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை? சட்டம் இருக்கிறதா? போலீஸ் இருக்கிறதா? முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? இதுதான் தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி.

இவர்கள் அழுகுரல் விஜய்க்கு கேட்கவில்லையா? மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? ‘உங்களுக்கு ஒண்ணு என்றால் இந்த விஜய் வருவான்’ என்ற சினிமா டயலாக், சிரிப்பு டயலாக் ஆகிவிட்டதே? விஜய் வரவில்லை. ஒன்று மூடிய வீட்டுக்குள் இருந்து விடுகிறார். அல்லது மூடிய தலைமைச் செயலகத்துக்குள் அடைந்து கொள்கிறார். அவ்வளவுதான்.

பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் இந்த ஆட்சியும் த.வெ.க. கட்சியும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். பிபின் மஞ்சி என்ற அந்த நபருடன் மூன்று பேர் சேர்ந்து அழைத்துச் சென்றுள்ளனர். மற்ற மூவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து கொந்தளித்துப் போய் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்கிறார்கள். அவர்களிடம் வந்து வாக்குவாதம் செய்கிறார் கும்பிடிப்பூண்டி த.வெ.க. எம்.எல்.ஏ.வான விஜயகுமார். மக்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

குழந்தையின் பெற்றோருக்கு உதவச் சென்ற மாதர் சங்கத்தினரை அவர்கள் பக்கம் காவல்துறை அனுமதிக்கவில்லை. மருத்துவமனை பிணவறை வாசலில் விஜய் படத்தோடு பத்து பேர் அனைவரையும் மிரட்டும் வகையில் நின்றுள்ளனர். ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் அந்த இடத்துக்கு வந்துள்ளார். இதுதான் சிங்கப்படை செய்யும் செயலா? அவ்வளவுதான் அவர்களுக்கு தரப்பட்ட டூட்டியா?

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த பெற்றோரின் விருப்பப்படி கும்மிடிப்பூண்டிக்கு செல்லவில்லை. சென்னை மூலக்கொத்தளத்திலேயே அடக்கம் செய்ய காவல் துறை கட்டாயப்படுத்தியது ஏன்?

என்ன செய்கிறது விஜய்யின் சிங்கப் பெண் படை? அது படையல்ல ரோந்து செய்பவர்கள். அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. உடுப்பில் நிறத்தை மாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். அவ்வளவுதான்.

மதுரையில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி இருக்கிறார். சிங்கப் பெண் படைக்கு புகார் அளித்தும் அந்த தொழில் அதிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கதறுகிறார் பாதிக்கப்பட்ட பெண். இதற்குத்தானா சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டது?

இன்னும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை. தனது ரசிகையை தனது கட்சிக்காரர்களே சீரழித்துள்ளனர், அதற்கு உடந்தையாக ஒரு சட்டமன்ற உறுப்பினரே இருந்துள்ளார்.

அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்துவிட்டு கைது செய்ய வேண்டாமா விஜய்? ஏன் செய்யவில்லை? செய்தால் விஜய் நாற்காலியே விழுந்து போகும். ஒரு ஓட்டில்தான் அவர் ஆட்சியே ஆடிக் கொண்டு நிற்கிறது. தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள சரவணனைக் காப்பாற்றுகிறார் விஜய். ‘ஆளைச் சொல்லு ரூல்ஸை சொல்றேன்’ என்பார்களே. அப்படி நடந்து கொள்கிறார் முதலமைச்சர் விஜய்.

நாட்டில் நடந்த சம்பவங்களுக்கு வாயைத் திறந்து பேசி இருக்கிறாரா விஜய்? ‘வாயில் என்னமோ வருது..’ என்றாரே?இப்போது வாயில் இருந்து எதுவும் வராதா?

இவரை ஆறு மாதம் வரை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும்? ஆறு மாதத்திற்குள் எத்தனை பாலியல் வன்கொடுமைகளைப் பார்க்க வேண்டும்? கொலை, கொள்ளைகளைப் பார்க்க வேண்டுமா? அரிவாள் வெட்டுகள், பெட்ரோல் குண்டுகளைப் பார்க்க வேண்டுமா?

விஜய் ஆட்சி நீடித்தால் நாடு தாங்காது என்கிற நிலைமையைத்தான் நாம் கண்ணுக்கு முன்னால் பார்க்கிறோம்.

Also Read: “காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!