Politics
“பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட எண்ணிவிடலாம், துரோகங்களை எண்ண முடியாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (05-04-2026) காலை, விருதுநகரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
சிவகாசி பட்டாசு என்றாலும் விருதுநகர்தான்! சாத்தூர் பலகாரம் என்றாலும் விருதுநகர்தான்! திருவில்லிப்புத்தூர் பால்கோவா என்றாலும் விருதுநகர்தான்! பரோட்டா என்றாலும் விருதுநகர்தான்! தீப்பெட்டி என்றாலும் விருதுநகர்தான்! காலண்டர் என்றாலும் விருதுநகர்தான்!
உங்களை குட்டி ஜப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்! மொத்தத்தில் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற மக்கள் வாழும் மாவட்டமான விருதுநகருக்கு உங்களை நாடி வந்திருக்கிறேன்! இப்படி, ஓயாமல் உழைக்கும் உங்களைப் பார்த்து நானும் கொஞ்சம் எனர்ஜி பூஸ்ட் ஏற்றிக் கொள்ளலாம் என்று விருதுநகருக்கு வந்திருக்கிறேன்.
விருதுநகர் என்று சொன்னாலே வீரத் தியாகி சங்கரலிங்கனாரை மறக்க முடியுமா? நமது தாய்நிலத்தை ‘தமிழ்நாடு’ என்று வாய் நிறைய – நெஞ்சம் நிறைய – பெருமை பொங்க அழைக்க வேண்டும் என்று போராடி, அதற்காக உயிரைத் தந்தவர் சங்கரலிங்கரனார் அவர்கள்!
அவர் மட்டுமா, ஈரோடு என்றால் தந்தை பெரியார்; காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா; திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பதைப் போன்று, விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராசர்! அவரின் மண் இது! அரசியல் கடந்து தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் என்னுடைய திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியவர் ஐயா காமராசர் அவர்கள்! அதை என்னால் எப்போதும் மறக்க முடியாது!
பெருந்தலைவரின் காமராசர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டு, இப்போது வரை அது கடைப்பிடிக்கப்படுகிறது! அப்படி, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கண் திறந்த பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் விருதுநகருக்கு நான் வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காக நான் சென்று வந்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் திராவிட மாடல் 2.0-வுக்கு டபுள் ஓகே சொல்லிவிட்டார்கள். விருதுநகர் மக்கள் திராவிட மாடல் ஆட்சி உருவாக வேண்டும் என்று சொல்ல நீங்கள் தயார் ஆகிவிட்டீர்களா? தயார்.
அதற்கு, இங்கு நிற்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.
முதலில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மக்கள் பணியாற்றுபவர்.
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் ஏறக்குறைய 23 இலட்சம் பேருக்கு பட்டா வழங்கி சாதனை படைத்திருக்கிறோம் என்றால் அந்த சாதனைகளுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் இவர். அப்படிப்பட்ட நம்முடைய அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் ஆதரவைத் தந்திட வேண்டும்.
அடுத்து, திருச்சுழி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் என்னுடைய இனிய சகோதரர் தங்கம் தென்னரசு அவர்கள். தலைவர் கலைஞரின் அன்புத் தூண்; அதுமட்டுமல்ல, என்னுடைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அண்ணன் தங்கப்பாண்டியனின் மகன். 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்திய திராவிட மாடல் ஆட்சியின் நிதித்துறையை தலைநிமிர வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இவரை எதிர்த்து நிற்கவே எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் விரும்பவில்லை என்று செய்திகள் வருகிறது. அந்த அளவு வலிமையான வேட்பாளர்! அப்படிப்பட்ட தங்கம் தென்னரசு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் மீண்டும் ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, சாத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்கள். இவர், மாவட்டச் சேர்மனாக இருந்து மக்கள்பணி ஆற்றியிருக்கிறார். கழகத்தின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து தீவிரப்பணி செய்து கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட கடற்கரை ராஜ் அவர்களுக்கு, நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் சாத்தூர் மக்களான நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தங்கபாண்டியன் அவர்கள். இரண்டு முறை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று உங்களுக்கு நன்றாக அறிமுகமானவர். தொகுதி மக்களுக்காக பல்வேறு சமூக சேவைப் பணிகளையும் ஆற்றி வருபவர். ராஜபாளையம் மக்கள் விரும்பும் தங்கபாண்டியனுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, விருதுநகர் சட்டமன்றத் தொகுதி. நமது கூட்டணித் தோழமையான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் என்னுடைய அன்புத் தம்பி விஜயபிரபாகரன் அவர்கள். எனது ஆருயிர் நண்பர் பெருமதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் மற்றும் அன்புச் சகோதரி பிரேமலதா அவர்களின் அன்பு மகன்தான் இங்கே வேட்பாளராக நிற்கிறார். தே.மு.தி.க-வின் இளைஞரணிச் செயலாளராக துடிப்புடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். அவருக்கு நீங்கள் எல்லாம் முரசு சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.
தம்பி விஜயபிரபாகரனுக்கு வாக்கு கேட்கும்போது, என்னுடைய நினைவுகள் எல்லாம் எங்கே செல்கிறது தெரியுமா? அவருடைய தந்தை என்னுடைய இனிய நண்பர் ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற ஒரு திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். அதில் நான் ஒரு கவுரவ வேடமாக ஒரு பாட்டு பாடி வருவேன்.
அது எதற்காக என்றால், வேட்பாளராக நிற்கும் விஜயகாந்தை ஆதரித்து நான் பாடும் பாட்டு. அந்தப் பாட்டுகூட என் மனதில் ஆழமாக இருக்கிறது. கலைஞர் எழுதிய பாட்டுதான். “ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு. நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு” என்று ஒரு பாட்டு வரும். அவ்வாறு, இவருடைய அப்பாவிற்கு ஓட்டு கேட்டு திரைப்படத்தில் நடித்தேன். இன்று அவரின் அருமை மகனுக்கும் முதலமைச்சராக இன்றைக்கு நேரடியாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். தம்பி விஜயபிரபாகரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, சிவகாசி சட்டமன்றத் தொகுதி. நமது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிவிக்கப்பட்ட நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோகன் அவர்கள். சிவகாசி நகர்மன்ற துணைத் தலைவராக செயல்பட்டவர். கடந்த முறை அதே தொகுதியில் உங்களுக்காக பணியாற்றியவர். மீண்டும் அசோகனுக்கு கை சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.
நிறைவாக, திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு. மகாலிங்கம் அவர்கள்! வத்திராயிருப்பு தாலுகா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். இந்த வட்டாரத்து மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றி வருபவர். களத்தில் தொடர்ந்து உங்களுக்காக போராடும் அவர் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க, தோழர் மகாலிங்கம் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கதிர் அரிவாள் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
உங்களிடம் உரிமையாக, உங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்த 7 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு நான் ஆதரவு கேட்கிறேன். அதுமட்டுமல்ல, மருது சகோதரர்கள் மாதிரி இரண்டு வெயிட்டான அமைச்சர்களை உங்கள் மாவட்டத்திற்கு தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து தந்திருக்கும் பெருமித உணர்வுடன் உங்கள் ஆதரவை நான் கேட்க வந்திருக்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் விருதுநகருக்கு செய்த சாதனைகளை சொல்ல நிச்சயமான ஒரு நாள் போதாது. அதனால் சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.
திருச்சுழி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய பேருந்து நிலையம்,
சிவகாசி - திருவில்லிப்புத்தூர் சாலையில் இருக்கும் சாட்சியாபுரத்தில் புதிய ரயில் மேம்பாலம்,
அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைகளில் புதிய கூடுதல் கட்டடங்கள்,
முடுக்கன்குளம் துணைமின் நிலையம்,
காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் கண்மாய்கள், அணைக்கட்டுகள் மேம்பாடு,
காரியாப்பட்டி வட்டத்தில் தெற்காற்றின் குறுக்கே புதிய அணை,
பிளவக்கல் அணைப் பகுதியில் பூங்கா,
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் சுற்றுலாத் தலமான சாஸ்தா கோயில் அருவிப் பகுதியில் மேம்பாட்டு பணிகள்.
இவை அனைத்திற்கும் மேலாக 40 ஆயிரம் பேருக்கு விருதுநகர் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, ஆயிரத்து 286 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணியை நீராதாரமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள்.
இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் 66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணிகள்,
விருதுநகரில் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா,
திருச்சுழியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் உணவுப் பூங்கா,
அருப்புக்கோட்டை மருத்துவமனை மாவட்ட தலைமையிட மருத்துவமனையாக மேம்படுத்தும் பணிகள், இராஜபாளையம் வட்டம் அயன் கொல்லன் கொண்டானில் 25 ஏக்கரில் 15 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை, திருவில்லிப்புத்தூரில் புதிய பேருந்து நிலையம், திருத்தங்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய ரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்சுழியில் அரசு கல்லூரி வேண்டும் என்று கேட்டீர்கள். அந்தப் பணியும் தொடங்கிவிட்டது. இன்னும் உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். விருதுநகருக்கு நிச்சயம் நான் செய்து தருவேன் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோல், சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல் அவதூறுகளையும், தரம் தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பரப்புரை செய்கிறார் பழனிசாமி! பழனிசாமி என்று சொன்னால் அது பொய், பித்தலாட்டம் என்றுதான் பொருளாகும்.
பழனிசாமி சொன்ன பொய்கள் என்று, ஒரு புத்தகமே போடலாம்! அந்த அளவுக்கு பொய்களை சொல்லிக்கொண்டிருக்கிறார். 5 முறை முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞரை பற்றி, பச்சை பொய்யை பேசிய பழனிசாமிக்கு, நான் நெல்லையில் பதிலடி கொடுத்திருக்கிறேன்.
தான் சொன்ன ஒரு பொய்யில் இருந்து தப்பிக்க, அடுத்தடுத்த பொய்களை கூச்சமே இல்லாமல் சொல்ல தொடங்கியிருக்கிறார். என்ன சொல்கிறார் என்றால்… பெருந்தலைவர் காமராசருக்கு இடம் தர மறுத்தோம், அம்மையார் ஜானகி MGR-அவர்களுக்கு இடம்தர மறுத்தோம் என்று உளறி கொட்டியிருக்கிறார்.
சங்கி கூட்டணியில் சேர்ந்ததால் அவர்களை போலவே வாட்சாப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். பெருந்தலைவர் காமராசர் மறைவுற்ற போது, சொந்த மகனை போல் உடனிருந்து இறுதி நிகழ்வுகளை செய்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!
காமராசரின் திருவுடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கலாம் என்று சொன்னபோது, "அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் இல்லை, எல்லோருக்குமான தலைவர்! முன்னாள் முதலமைச்சர் என்பதால் ராஜாஜி மண்டபத்தில்தான் வைக்க வேண்டும்" என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரை கிண்டி காந்தி மண்டபத்தில் தகனம் செய்ய முடிவெடுத்து, நள்ளிரவில் மழையில் நனைந்தபடி அதற்கான இடத்தை தேர்வு செய்தார்.
முப்படை வீரர்கள் தூக்கிக்கொண்டு வந்த பெருந்தலைவர் காமராசரின் உடலை வாங்கி, பீரங்கி வண்டி மேல் வைத்தது யார் தெரியுமா? தலைவர் கலைஞரும், அன்றைய கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் மற்றும் திமுக அமைச்சர் ராசாராம் ஆகியோர்தான்! தகன மேடைக்கு அருகே இந்திரா காந்தி அம்மையாருடன் கலைஞரும் இருந்தார். இது எல்லாமே வரலாறு!
பழனிசாமி அவர்கள் சொன்ன பொய் உண்மை என்றால், அந்த காலத்திலேயே இவை சர்ச்சையாகி இருக்கும். பத்திரிகைகளில் செய்தியாகி இருக்கும். ஆனால், அப்படி எதுவுமே இல்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கலைஞரை புகழ்ந்துதான் எழுதியிருக்கிறார்கள். அதேபோல், ஜானகி MGR அவர்கள் மறைந்த சில நாட்களிலேயே, ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் MGR இல்லத்தில் ஜானகி MGR அவர்களின் படத்தை திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர்!
ஆர்.எம்.வீரப்பன், ராமசாமி உடையார், வழக்கறிஞர் N.C. ராகவாசாரி ஆகியோரும் உடனிருந்த நிகழ்வு அது. சில காலம் மட்டுமே முதலமைச்சராக இருந்த ஜானகி MGR அவர்களின் படத்தை, அதிமுக தலைவர்களே கோட்டையில் மாட்டவில்லை. தலைவர் கலைஞர்தான் 1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு கோட்டையில் அவர்கள் படத்தை மாட்ட சொன்னார். அந்த அளவிற்கு அவரை மதித்தார்.
முந்தாநாள் அடித்த காற்றில் முதலமைச்சராகி, மக்களால் தூக்கியெறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? தப்பு செய்தால் வருத்தம் தெரிவிப்பதுதான் நல்ல மனிதருக்கான இலக்கணம். அதைவிட்டுவிட்டு, மேலும் மேலும் பொய்களை சொன்னால், பழனிசாமி இன்னும் அசிங்கப்பட்டுத்தான் போவார்.
இப்போது புதிதாக இன்னொரு பொய்யை சேர்த்திருக்கிறார்! ”அரசு ஊழியர்களை ஆசை வார்த்தை காட்டி, திமுக அரசு ஏமாற்றிவிட்டது!” என பழனிசாமி பேசியிருக்கிறார். அப்படி ஏமாற்றி இருந்தால், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் என்னை கோட்டையில் சந்தித்து, நன்றி சொல்லி எனக்கு இனிப்பு ஊட்டுவார்களா? சொல்லுங்கள்!
நிறைவேற்றவே முடியாது என்று சொன்னதை நாம் செய்துவிட்டோம் என்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், கடுப்பில், பழனிசாமி இப்படி எல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார். இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி, அவர்களுக்கு தரும் ஊதியத்தையும் இழிவுபடுத்தி பேசிய பழனிசாமிக்கு அவர்களிடம் இருந்து, ஸ்வீட்டும் கிடைக்காது! அவர்களின் ஓட்டும் கிடைக்காது! இதுதான் உண்மை.
இங்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அமர்ந்திருக்கிறார். இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று எவ்வளவு முயற்சிகள் எடுத்தோம் என்று அவருக்கு முழு விவரம் தெரியும். நம்முடைய வரிப்பணம் மொத்தத்தையும் வாங்கி, பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படுத்தப்படும் செயற்கையான நிதி நெருக்கடியை மீறி, இந்த ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட எல்லாவற்றையும் நாம் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
அரசு ஊழியர்களுக்கு மட்டுமா துரோகம் செய்தார்! பழனிசாமி துரோகம் பண்ணாத தரப்பே தமிழ்நாட்டில் இருக்க முடியாது! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து உழவர்களுக்கு துரோகம்! பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து, பெண்களுக்கு துரோகம்! குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று பா.ஜ.க.வின் எல்லா சட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து சிறுபான்மை சமூகத்திற்கு துரோகம்.
கட்சியில் உங்களை வளர்த்துவிட்ட, செங்கோட்டையனுக்கு துரோகம், பதவி கொடுத்த அம்மையார் சசிகலா, தினகரனுக்கும் துரோகம், சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு துரோகம், உங்கள் ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சட்டப் பேரவையின் தலைவர் தனபால் அவர்களுக்கே சீட்டு கொடுக்காமல் துரோகம், எல்லாவற்றிற்கும் மேல், மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட பா.ஜ.க.வை எதிர்த்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து துரோகம். இப்போது நான் சொன்ன துரோகத்தை உங்களால் எண்ண முடிந்ததா? ஆனால், பழனிசாமியின் தேர்தல் தோல்விகளை கூட நீங்கள் எண்ணிவிடலாம்.
ஏற்கெனவே “பத்து, அடுத்தது 11”! பாகுபலி படத்தில் சத்தியராஜை பார்த்து சொல்வது மாதிரி ஒரு டயலாக் வரும். “விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா” அப்படி ஒரு வசனம் இருக்கும். அதுபோல், துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமிதான்! இப்படி, தன்னை நம்பிய அத்தனை பேருக்கும் அல்வா கொடுத்த பழனிசாமி பேசுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்? அதுவும், நீங்கள் ஆட்சி செய்த இலட்சணத்தைத்தான் தமிழ்நாடு 4 ஆண்டுகள் பார்த்ததே!
ஆனால், 2021-இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்ன வாக்குறுதிகளை எல்லாம், படிப்படியாக நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசு நம்முடைய திராவிட மாடல் அரசு!
வெற்றி பெற்ற தொகுதி, வெற்றி பெறாத தொகுதி, வெற்றி பெற்ற மாவட்டம், வெற்றி பெறாத மாவட்டம் என்று எந்த பாகுபாடும் காட்டாமல், எல்லா பகுதிகளையும் சமமாக வளர்த்தெடுத்து இருக்கிறோம். அதனால்தான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில், தமிழ்நாடு முழுவதும் முழு வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை எப்படியெல்லாம் வளர்த்தெடுக்கப்போகிறோம் என்று, தொலைநோக்கு கொண்ட செயல்திட்ட அறிக்கையாக, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். அதாவது நம்முடைய சூப்பர்ஸ்டாரை களத்தில் இறக்கிவிட்டு, நான் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறேன்.
ஒரு பாட்டு வரும்… “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்” அதுபோன்று… இதுதான் தற்போது சூப்பர் ஸ்டார். எல்லோரும் இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள்.
அது என்னவென்றால்,
மகளிருக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை என்று சொன்னோம். இன்றைக்கு இந்தியாவிற்கே மாடலாக நம்முடைய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாறிவிட்டது. இந்த திட்டத்தால் பலரது வாழ்க்கையும் மாறிவிட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த செல்வி என்ற சகோதரி கொடுத்த பேட்டியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். கணவரை இழந்துவிட்டார்.
இரண்டு பெண் பிள்ளைகள். வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். தினம் ஒரு வீட்டை சுத்தம் செய்து, பாத்திரங்களையெல்லாம் கழுவி வைக்க வேண்டும் என்றால் அதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடும். இப்படி நிறைய வீடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும். உடம்பெல்லாம் வலிக்கும். ஆனால், இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதால், ஒரு வீட்டை குறைத்துவிட்டேன் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
“வெறும் ஆயிரம் ரூபாய், இதை வைத்து என்ன செய்ய முடியும்” என்று சிலர் கேட்டார்களே! செல்வி போன்ற சகோதரிகளுக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வை இந்த திட்டம் வழங்கியிருக்கிறது. இனி அந்த மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் இல்லை, மாதம் 2 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்தி அறிவித்திருக்கிறோம்! தாய்மார்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியா? சொன்னபடியே 2 ஆயிரம் தருவோம் என்பதற்கான டிரெயிலர்தான் கோடைக்கால சிறப்பு நிதி சேர்த்து, அண்மையில் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய்!
அதேபோன்று, மதுரையை சேர்ந்த அர்ச்சனா என்கிற சகோதரி, காலை உணவுத் திட்டத்தால் பயனடையும் கதையை சொன்னார்கள். வசதி இல்லாத காரணத்தால், ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சமைப்போம். காலையில் சமைக்க மாட்டோம். முன்பெல்லாம் சாப்பிடாமல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற என் மகளுக்கு, இப்போது காலை உணவு திட்டத்தால் நேரத்திற்கு, சூடான உணவு கிடைக்கிறது.
அதுவும், சாம்பாரில் போடும் காய்கறிக்காகவே விரும்பி சாப்பிடுகிறார். சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு நிறைய பரிசுகள் எல்லாம் பெறுகிறாள். நான் படித்த காலத்தில் இப்படி ஒரு திட்டம் இருந்திருந்தால், நானும் காலேஜுக்கு சென்று படித்து பெரிய ஆளாகியிருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.
அந்தக் காலை உணவு திட்டத்தையும் அடுத்து அமையவுள்ள நம்முடைய ஆட்சியில், ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த போகிறோம். இப்படி நம்முடைய ஒவ்வொரு திட்டத்திற்கு பின்னும் ஒரு குடும்பம், ஒரு தலைமுறை, ஒரு ஊரே வளர்ச்சி அடைந்த கதைகள் நிறையவே இருக்கிறது.
இளைஞர்களுக்கு கட்டணமில்லாமல் வேலைவாய்ப்புக்கான திறன் பயிற்சிகள் வழங்கும் நான் முதல்வன் திட்டத்தின் அடுத்தகட்டமாக, நான் முதல்வன் 2.0 செயல்படுத்தப் போகிறோம்!
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திட்டத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிக்கொண்டு வருகிறோம் இல்லையா? இனி அதை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம்.
அதுமட்டுமல்ல, வரும் 5 ஆண்டுகளில் 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப் போகிறோம்!
முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என எல்லோருக்குமான உதவித்தொகையும் டபுள் மடங்காக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.
எல்லா சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப் போகிறோம்! இது நூலகம் மட்டுமல்ல, மீட்டிங் ரூம், ஆபிஸ் ரூம், அதிவேக இண்டர்நெட் வசதி என்று எல்லா வசதிகளும் கொண்ட கட்டடமாக முதல்வர் படைப்பகம் இருக்கும்! தனியாரில் ஆயிரக்கணக்கில் செலவாகும் வசதிகளை, மிக மிக குறைந்த கட்டணத்தில் வழங்கப் போகிறோம்!
பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்க போகிறோம்!
எல்லாவற்றிற்கும் மேல், பெண்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவது மாதிரி ஒரு அல்டிமேட் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இல்லத்தரசி திட்டம்! எட்டாயிரம் ரூபாய் கூப்பன்! எதற்கான கூப்பன்? இல்லத்தரசிகளான நீங்கள் உங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருளை, உங்கள் ஊரில், உங்களுக்கு விருப்பமான கடையில், உங்களுக்கு பிடித்த மாதிரி வாங்கிக் கொள்வதற்கான கூப்பன்!
புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம். பழையவற்றைக் கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சும் செய்து கொள்ளலாம். என்ன வாங்க வேண்டும், எப்படி வாங்க வேண்டும், எந்த கடை, என்ன கலர் எல்லாமே உங்களின் சாய்ஸ்தான்!
இந்தப் கூப்பனை கொடுத்து, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், மின் அடுப்பு போன்ற எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். என்னை பொறுத்தவரை நம்முடைய குடும்பத்தலைவிகளின் வீட்டு வேலை சுமை பெருமளவு குறைய வேண்டும். அதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்!
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைப் பற்றித்தான் எல்லோரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர்தான் சோகமாக இருக்கிறார். யார் அவர்? அவர்தான் பழனிசாமி! இல்லத்தரசி திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு, “இதில் தி.மு.க.காரர்கள் கமிஷன் அடிப்பார்கள்” என்று அடிப்படையே இல்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். பணத்திற்கு பதிலாக கூப்பன் தருகிறோம்.
மக்கள் கடையில் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ளப போகிறார்கள். இதில் எங்கே ஊழலும், கமிஷனும் வந்தது? தன்னைப்போன்றே பழனிசாமி எல்லோரையும் நினைத்துவிட்டார். எது எப்படியோ, இல்லத்தரசி அறிவிப்பால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இப்போது பியூஸ் போன சாமி ஆகிவிட்டார்!
தேர்தல் அறிக்கையில் இன்னும் பல அறிவிப்புகளும் இருக்கிறது:
தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம்.
திராவிட மாடல் 2.0-வில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர், தொழில் தொடங்க கடன் பெறும் உச்சவரம்பு 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 500 உழைப்பாளர் கூடங்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுத் தரப்படும்.
நெசவாளர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் 10 கைத்தறிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
50 கைத்தறிக் குழுமங்கள் அமைக்கப்படும்.
10 ஆயிரம் கைத்தறிகளை 90 விழுக்காடு மானியத்துடன் நவீனப்படுத்துவோம்.
முதியோர்களுக்கான அன்புச்சோலை இல்லங்கள் எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூறு விழுக்காடு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
இங்கு இருக்கும் விருதுநகர் சுற்றுவட்டார மக்களை மகிழ்விக்கும் ஸ்பெஷல் வாக்குறுதிகளும் இருக்கிறது! விருதுநகர், தூத்துக்குடியில் பசுமை பட்டாசு உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் பனைத் தொழிலாளர்களுக்கு தேவையான பனைமரம் ஏறும் கருவிகள் உட்பட இதர கருவிகள் 100 விழுக்காடு மானியத்துடன் வழங்கப்படும்.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்தப்படும். அவர்கள் குடும்பத்திற்கு கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படும்.
இப்படி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு தரப்பினரையும் மனதில் வைத்து தேர்தல் அறிக்கையை தயார் செய்திருக்கிறோம். எப்படிப்பட்ட அறிக்கை இது? ஆறில் இருந்து அறுபது வரை, பெண்கள் முதல் ஆண்கள் வரை, இளைஞர்கள் முதல் முதியோர் வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை எல்லோருக்கும் பிடிக்கும்! பிடிக்காதவர்களே இருக்க முடியாது! அதனால்தான் இதை ‘2026 தேர்தல் களத்தின் சூப்பர்ஸ்டார்’ என்று சொல்லி நான் அறிமுகப்படுத்தினேன்.
வாக்குறுதியை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தி.மு.க. கொடுக்கும் வாக்குறுதியைதான் மக்கள் நம்புகிறார்கள்! மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. யார் சொல்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அதற்கான மதிப்பும்.
என்.டி.ஏ–வைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டிற்கு எதிராக எல்லா வேலையும் பார்த்துக்கொண்டு, தேர்தல் வந்தால் தமிழ் மேல் பாசம் இருப்பது மாதிரியும், காமராசர், எம்.ஜி.ஆர். மாதிரி தலைவர்களை சொந்தம் கொண்டாடவும் புறப்பட்டுவிடுகிறார்கள்.
இவர்களின் சங்கி கூட்டம்தான், 1966-ஆம் ஆண்டு காமராசரை டெல்லியில் வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தார்கள். “மனுதர்மத்திற்கும் காமராசரின் மனித தர்மத்திற்கும் நடக்கும் பலாத்கார போராட்டம்” என்று தந்தை பெரியார் கண்டித்தார். இப்படி, காலம்தோறும் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் தலைவர்கள் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் இவர்களுக்கு வெறுப்புதான்!
இப்படிபட்ட தமிழின விரோதிகளுடன் பழனிசாமி கூட்டணி வைத்திருக்கிறார். பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பதுதான்! NDA ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்தால் என்ன ஆகும் என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியது கூட இல்லை. இந்தியா முழுவதும் பா.ஜ.க. புகுந்த மாநிலங்கள் என்ன கதியில் இருக்கிறது? பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த தலைவர்களும், கட்சிகளும் என்ன ஆனார்கள் என்று பார்த்தாலே நமக்கு பதில் கிடைத்துவிடும்!
நாம் இப்போது போராடுவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; ஒரு கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, விருதுநகர் மக்கள் அனைவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்! சொன்னதைச் செய்யும் தலைவர் கலைஞரின் மகனாக கேட்கிறேன்.
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் கடற்கரை ராஜ் அவர்களுக்கும்;
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் தங்கபாண்டியன் அவர்களுக்கும் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அதேபோல், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் நமது தோழமைக் கட்சியான தே.மு.தி.க.-வின் வெல்லும் வேட்பாளர், நம்முடைய மதிப்பிற்குரிய கேப்டனின் மகன், விஜய் பிரபாகரன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் சகோதரர் ராகுல் காந்தியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அசோகனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தோழமை இயக்கமாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் மகாலிங்கம் அவர்களுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் நீங்கள் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும்.
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம். நாடு வளம் பெற நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
Also Read
-
அமைதியை விரும்புவது தமிழ்நாட்டின் D.N.A.. அதைச் சிதைக்க துடிக்கும் NDA - மதுரையில் கர்ஜித்த முதலமைச்சர்!
-
மோடிஜி Where Is LPG? என்று கேட்கும் மக்களுக்கு பிரதமரின் பதில் என்ன? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
தமிழ் மண்ணில் மும்மொழி கொள்கையை கூறி வாக்கு கேட்க முடியுமா?: தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் சவால்!
-
”கலைஞர் குறித்து பழனிசாமியின் அவதூறு பேச்சு.. கல்லினும் கொடிய மனம் கொண்ட பழனிசாமி” : குவியும் கண்டனங்கள்!
-
’ஜன் விஷ்வாஸ்’ மசோதா- ரயிலில் போதை, புகை.. அபராதம் செலுத்தினால் குற்றமாகாதா? : வில்சன் எம்.பி. கண்டன உரை!