Politics

“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!

இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.2) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றின் விவரம் பின்வருமாறு,

தி.மு.க எம்.பி கே.ஆர்.என். ராஜேஷ்குமார், “2020 முதல் ஒவ்வொரு வங்கியிலும் ஒன்றிய அரசின் பங்குகளின் விவரங்களை ஆண்டு வாரியாகவும் வங்கி வாரியாகவும் வெளியிட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளில் அரசு பங்குகள் குறைந்ததற்கான காரணங்களை ஒன்றிய அரசு விளக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், “2007 முதல் மாநில ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டின் (AIQ)கீழ் கிடைக்கும் மொத்த மருத்துவ இடங்களின் விவரங்களை ஆண்டு வாரியாக வெளியிட வேண்டும்.

2007 முதல் OBC (27 சதவீதம்) உட்பட பல்வேறு பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் எவ்வளவு?” என கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என் சோமு, “விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்க பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரசாயனங்கள் மற்றும் உரங்களின் விலையைக் குறைக்க ஏற்படுத்தியிருக்கும் திட்டங்கள் என்ன?

மாநிலத்தில் பசுமை உரங்களுடன் விவசாயிகளுக்கு உதவுவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி கதிர் ஆனந்த், “பிரதமரின் மித்ரா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இரண்டு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை உருவாக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

சேமிப்பு கிடங்குகள் கட்டுதல் மற்றும் பருத்தி விலையை நிலையாக வைத்திருக்க அரசாங்கம் சிறப்புத் திட்டங்களைத் தொடங்கியுள்ளதா?” என்றார்.

தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், “புதிய மீன்பிடி துறைமுகங்கள், குளிர்பதன வசதி உள்கட்டமைப்பு மற்றும் மீன்வளர்ப்பு தொடர்பாக ஒப்புதலுக்காக ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ள திட்டங்கள் என்ன?

தொடர்ச்சியான வெள்ளம் மற்றும் புயல் சேதங்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் நகர்ப்புற கடலோர வாழ்வாதார உள்கட்டமைப்புக்கான உதவியை அதிகரிக்க அரசு முன்மொழிந்துள்ள திட்டங்கள் மற்றும் தொகையின் விவரங்கள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், “அமெரிக்காவின் வரிகளின் பாதகமான விளைவுகளிலிருந்து இந்தியாவில் ஒட்டுமொத்த ஜவுளித் துறையைப் பாதுகாக்க, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்க, அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

இந்தியாவின் முக்கிய ஆடை ஏற்றுமதி மையங்களான திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் சேலம் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?” என்றும்;

திமுக எம்.பி. கலாநிதி வீரசாமி, “வேளாண் உணவு ஏற்றுமதிகளை செயல்படுத்த வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (APEDA) தொடங்கப்பட்ட (BHARATI) திட்டத்தின் நோக்கங்கள் என்ன?

BHARATI திட்டத்தில் தமிழ்நாடு போன்ற தெற்கு மாநிலங்கள் உட்பட பிரதிநிதித்துவம் குறைந்த பகுதிகளைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், கிராமப்புற நிறுவனங்கள், FPOக்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் என்ன?” என்றும் கேள்வி எழுப்பினர்.

Also Read: “தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!