Politics

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட தடை நீக்கம்தான், திமுக வெற்றிக்கான தொடக்கப்புள்ளி! : பி.வில்சன் திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டு வருகிற மக்கள் நலத்திட்டங்கள் பல, தேசிய அளவில் ஒவ்வொரு மாநிலமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டம் இல்லாத தேர்தல் வாக்குறுதிகளே இல்லை என்ற அளவிற்கு, திராவிட மாடல் அரசின் திட்டம் இந்திய அளவில் மக்களின் ஈர்ப்பு திட்டமாக அமைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாட்டளவில் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அ.தி.மு.க.வினர், இத்திட்டத்தை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், மக்கள் நலப்பணியை உயிர்ப்போடு செய்து வரும் தி.மு.க அரசு, மக்களை மனங்களை மட்டுமல்லாமல், வழக்கையும் வென்றெடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான பி.வில்சன், “2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க பெற இருக்கும் வெற்றிக்கு, தொடக்கப்புள்ளியாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமைந்துள்ளது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, “அரசியல் தலைவர்களின் பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது என்பது நாடு முழுவதும் பின்பற்றப்படும் நிகழ்வு.

மனுதாரர் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு மனு தாக்கல் செய்துள்ளார். இது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும்.

அரசியல் சண்டைக்கு நீதிமன்றங்களை பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ரூ.10 லட்சம் அபராத தொகையை ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்தாவிட்டால் அவதூறு வழக்கு தொடரலாம்” என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எடுத்துரைத்தார்.

Also Read: கலைஞர் பல்கலைக்கழக மசோதா - உச்சநீதிமன்ற தீர்ப்பின் உணர்வை மதிக்காத ஆர்.என்.ரவி : இரா.முத்தரசன் கண்டனம்!