கலைஞர் பல்கலைக் கழகம் தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்திருக்கிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உணர்வுக்கு மதிக்காமல் அதிகார அத்துமீறலை தொடரும் அவரது அடாவடித்தனத்தை வெளிப்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நாட்டு மக்களின் பெருமதிப்புக்கும், போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர், மக்கள் நினைவில் வாழும் கலைஞர். அவரது நீண்ட பொது வாழ்வுக்கு பெருமை சேர்க்கும் முறையில் கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு சேர வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்க வகை செய்யும் சட்ட மசோதாவை 2024 ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்து, ஒரு மனதாக நிறைவேற்றியது. நிறைவேற்றப்பட்ட மசோதா உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்குகளுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, கலைஞர் பல்கலைக் கழகம் தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல், மூன்று மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்து, அவருக்கான கால அவகாசம் முடியும் போது, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உணர்வுக்கு மதிக்காமல் அதிகார அத்துமீறலை தொடரும் அவரது அடவடித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
நாடறிந்த மூத்த தலைவர், தலைசிறந்த ராஜியவாதிகளில் ஒருவர் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்ட தலைவரின் பெயரில் அமையும் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை இழுத்தடிக்கும் ஆளுநரின் வன்மை குணத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.