தமிழ்நாடு

’உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்கு விதித்த தடை நீக்கம் : அதிமுகவுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’உங்களுடன் ஸ்டாலின்'  திட்டத்துக்கு விதித்த தடை நீக்கம் : அதிமுகவுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சி.வி.சண்முகத்தின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், பொதுமக்கள் சார்ந்த திட்டம் என்றும், இதுவரை 9 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அதிமுக தரப்பில் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறினார். வழக்கு தொடர்ந்த நபர் முன்பு அமைச்சராக இருந்து 25 திட்டங்களை அப்போதைய முதலமைச்சர் பெயரில் செயல்படுத்தியவர் என்றும், தற்போது அவர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் திட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியல் தலைவர்கள் பெயரில் திட்டங்கள் செயல்படுத்துவது நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயரிலும் இதுபோன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், ஒரு அரசியல் தலைவரை மட்டும் தேர்ந்தெடுத்து மனுதாரர் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இது அவரது அரசியல் உள்நோக்கத்தை காட்டுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தனர். மனுதாரர் சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு மனுத்தாக்கல் செய்து இருப்பதாகவும், இது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும் என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், அபராத தொகையை ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்தத் தவறினால் சி.வி.சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories