Politics
Secular,Socialist வார்த்தைகள் நீக்கம்... இந்தியாவை சீர்குலைக்கும் பாஜக : கி.வீரமணி விமர்சனம் !
‘செக்குலர்’ ‘சோசலிஸ்ட்’ என்ற முகப்புரையில் உள்ள சொற்கள் இடம் பெறாத அரசியல் சட்டத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எம்.பி.களுக்கு அனுப்பி வைத்ததற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை அனுப்பி இருப்பதாகவும், அதன் முகப்புரையில் (Preamble) சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய ஆங்கிலச் சொற்கள் (Socialist, Secular) இடம்பெறவில்லை என்பதும் செய்தியாக வெளிவந்துள்ளது. இது எதிர்க்கட்சியினரையும் அரசியல் சட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களையும் மிகவும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்தியாவை சீர்குலைப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்தச் செயலை அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் செய்கிறார் என்றால், இந்தியாவைச் சீர் குலைப்பதில் இவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே அடையாளம் அல்லவா?
அவர் அனுப்பிய புத்தகம் 1976க்கு முன் வெளியானதன் மறு பதிப்பு என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தாங்கள் ஏற்கமாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக அறிவிக்கிறது - அதற்கு மக்களவைத் தலைவர் பிரச்சாரக் கருவியாக ஆகி இருக்கிறார் என்று தானே பொருள்!
சட்டப்படி சரியான நிலைப்பாடு என்ன?
இதுவரை 106 அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் வந்திருக்கின்றன. அந்தத் திருத்தங்களுடன் கூடியது தான் நடைமுறையில் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம். அதன்படி தான் நாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் சட்டப்படியான சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்தை உதாசீனப்படுத்துவது சட்ட விரோதம் தானே!
ஓம் பிர்லா அவர்களுக்கு நாம் வைக்கின்ற கேள்விகள்
1. நாடாளுமன்ற உறுப்பினராகவும், மக்களவைத் தலைவராகவும் ஓம் பிர்லா பதவியேற்கும்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரதியை வைத்து அவர் உறுதிமொழி எடுத்தார்? நடப்பில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பேன் என்று தானே உறுதியெடுத்தார்? திருத்தங்கள் செய்யப்படாத 1950ஆம் ஆண்டு அரசியமைப்புச் சட்டத்தின் படி உறுதியேற்கிறேன் என்று சொன்னாரா? அப்படியானால் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துப்படி இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் எல்லாம் செல்லாதவையா?
திருத்தங்கள் செய்யப்படாத அரசியலமைப்புச் சட்டத்தை இப்போது அச்சடிப்பார்களா? விநியோகம் செய்வார்களா? அதை நீதிமன்றமோ, மக்கள் மன்றமோ ஏற்றுக் கொள்ளுமா? எதிலும் நேரடியாகச் செய்யாமல், மறைமுகமாகவே செய்யும் ஆர்.எஸ்.எஸ்.சக்திகளின் ‘தனித்தன்மை’ இதில் விளங்குகிறது!
2. சமதர்மம், மதச்சார்பின்மை (Socialist, Secular) ஆகிய சொற்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை (பல்ராம் சிங் மற்றும் பிறர் எதிர் இந்திய ஒன்றிய அரசு, 2020) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோரின் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மதச்சார்பின்மையையும், சமதர்மத்தையும் உறுதிப்படுத்தும் இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் கூறுகளையும் அது கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பை மீறிச் செயல்படுகிறார்களா?
3. இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் முகப்புரை என்பது அதன் அடிக்கட்டுமானம் ஆகும். அந்த அடிக்கட்டுமானத்தை அவர்கள் இடிக்கலாம் என்று முயல்கிறார்களா? அல்லது இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் சில விஷயங்களை வைத்துக் கொள்ளவும், சிலவற்றை நீக்கிவிடவும் இது சர்வாதிகார நாடு என்று கருதுகிறார்களா?
நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப வேண்டும்
இதை எளிதில் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையைச் சமூக நீதியைக் காக்க அனைத்துக் கட்சியினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும் தீவிரமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலகட்டம் இது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
துர்கா ஸ்டாலினின் “அவரும் நானும் - பாகம் 2” நூல் வெளியீடு! : எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார்!
-
அரசு கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள்! : எப்படி விண்ணப்பிக்கலாம்?
-
சென்னை உயர்நீதிமன்ற 54ஆவது தலைமை நீதிபதி ம.மோ.ஸ்ரீவஸ்தவா! : யார் இந்த ஸ்ரீவஸ்தவா?
-
தமிழறிஞர் பெருமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! : தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்!
-
இந்தியாவின் முதல் ‘இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம்’ தமிழ்நாட்டில் அமைகிறது! : எங்கு? எப்போது?