ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய நாள் முதலே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். இவர் அக்கட்சி சார்பில் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்துள்ளார்.
இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்து வந்த அன்வர் ராஜா, அக்கூட்டணியை விட்டு வெளியே வருமாறும் கட்சி தலைமையிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால் அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதை உறுதி செய்தது.
இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்வர் ராஜாவுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்ய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, "அதிமுக தனது கொள்கையில் இருந்து அதிமுக தடம்புரண்டு, பாஜகவின் கையில் சிக்கியுள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததும் அமித்ஷா ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பெயரை இவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறவில்லை. இந்த அளவுக்குதான் பழனிசாமியின் நிலை இருக்கிறது.
அதிமுகவை சீரழிப்பதற்கே பாஜகவில் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் பாஜக எத்தனையோ கட்சிகளை உடைத்து, அந்த கட்சியை சீரழித்துள்ளது. எந்த கட்சியோடு பாஜக கூட்டணி வைத்தாலும், அந்த கட்சியை அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம். இப்போது அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம். அதைத்தான் அவர்கள் இப்போது செய்துகொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இணையான தலைவர் யாரும் இல்லை. இவருக்கு இணையான தலைவர் அதிமுகவில் இல்லை, இனி யாரும் அப்படி வருவார்களா என்பதும் சந்தேகம்தான். நிச்சயம் முதலமைச்சர்தான் மீண்டும் முதலமைச்சராக வருவார். இதுதான் மக்களின் விருப்பம்"என்று கூறியுள்ளார்.