Politics

பீகார் தேர்தலுக்காக வேடமிடுகிறதா ஒன்றிய பா.ஜ.க அரசு? : சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு எதிரொலி!

இந்திய அளவில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளாலும், எதிர்க்கட்சியினர்களாலும் சமூகநீதி, சமத்துவம், ஒற்றுமையுணர்வு, மதச்சார்பின்மை உள்ளிட்ட கொள்கைகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் முன்னிறுத்தப்படுகின்றன.

ஆனால், அதில் பெரும்பான்மையான (முழுமையான) கோரிக்கைகள் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ கொள்கைக்கு முற்றிலும் எதிராக இருப்பதால், அவற்றை நிறைவேற்றாமல், அதற்கு நேர் - எதிரான சட்டத்திருத்தங்களை கொண்டுவருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

மொழியை திணிக்காதீர்கள் என்றால் இந்தி திணிப்பை கொண்டுவர புதிய கல்விக் கொள்கை; சட்ட - ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்றால் சட்டங்களையே மாற்ற குற்றவியல் சட்டத்திருத்தம்; சிறுபான்மையினர் நலன்களை காப்பாற்ற வேண்டும் என்றால் சிறுபான்மையினர்களை நாடுகடத்த குடியுரிமை திருத்தச்சட்டம்; மாநில உரிமைகளை உறுதிப்படுத்துங்கள் என்றால் மாநில அதிகாரங்களை பறிப்பதுமாகதான் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இவ்வரிசையில் ஒன்றாகதான், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியபோது, அதற்கு “பிளவுவாதத்தை” கோரிவருகின்றனர் என திரித்து விமர்சித்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.

எனினும், சமூகநீதியை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தாலும், நெருங்கி வரும் பீகார் தேர்தலுக்கு சாதகமான நடவடிக்கை வேண்டும் என்பதாலும், தற்போது தேதி குறிப்பிடப்படாமல், வெறுமென சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இது பலரால் வரவேற்றப்பெற்றாலும், இதற்கு பின்னணி என்ன? என்ற கேள்வி, தேசிய அளவில் எழுந்துள்ளன. காரணம், சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையான அதிகாரத்துவப் பிடிப்பு கைவிட்டுப்போகும். அவர்கள் பின்பற்றி வருகிற பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடு, மறந்துபோகும்.

ஆகவே, கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு செயல்படுத்திடுமா? என்றால், அது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இத்தகு கேள்விகளுக்கு, பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரங்களே, வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதாவது முதன்முறையாக மோடி, பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பு, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை தீரும்” என்றார். 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. தீர்வு மட்டும்தான் தீராததாய் நீடிக்கிறது.

இதே நிலைதான், வறுமை ஒழிப்பு, கருப்பு பணம் ஒழிப்பு, மாநிலங்களுக்கான உரிமை போன்ற வாக்குறுதிகளுக்கும். பா.ஜ.க.வின் உச்சபட்ச தேர்தல் உத்தி, அவர்களின் பொய் பிரச்சாரமே என்பது இந்திய அரசியலில் வரலாறாகவே எழுதப்பட்டுவிட்டது.

இதுபோன்ற பிரச்சாரமாகதான், இந்த அறிவிப்பும் அமைந்திருக்கிறதோ என்ற கேள்வி, பலரின் மனதில் எழத்தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இதுகுறித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில், “சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கிறோம். ஆனால், இது எப்போது எடுக்கப்படும் என்ற அறிவிப்பை, ஒன்றிய அரசு வெளியிடவில்லை. எனவே, இப்போது வெளியிடப்பட்டிருக்கிற அறிவிப்பு, பீகார் தேர்தலையொட்டிய அறிவிப்பாகவே கருத முடிகிறது. இது பா.ஜ.க.வின் அரசியல் வேடத்தில் மற்றொரு அறிவிப்பாகவே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தலுக்கான அறிவிப்புதான் சாதிவாரி கணக்கெடுப்பு என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று, மக்கள் தொகை சார்ந்த தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) அமலுக்கு வந்தால், பீகாரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்பது.

அதனால்தான், பீகார் தேர்தலுக்காக, பா.ஜ.க காட்டுகிற மும்முரம், அண்மை காலங்களில் நினைக்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் நடந்த சில நாட்களில், நாடே துக்கமும், வருத்தமும், சினமும் கொண்டிருக்கிற வேளையில், நாட்டின் பொறுப்புள்ள பிரதமராக செயல்படாமல், பா.ஜ.க.வின் பொறுப்புள்ள தலைவராக பீகார் பிரச்சாரத்திற்கு சென்று வந்தார் மோடி.

பிரதமர் மோடியின் இந்த செயல், பா.ஜ.க.வின் மீதான அதிருப்தியை அதிகரிக்க செய்தது. அதனை களைந்தெரியவும்தான், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற, பல காரணங்கள் இருக்க, வெறும் அறிவிப்பிற்காக ஒன்றிய அரசை பாராட்டுவது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாகவே அமைந்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “நம் நாட்டின் பிரதமர் மோடி, தலைப்பு செய்திக்காக பேசுவதில் திறமையானவர். 2019ஆம் ஆண்டு தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.8,254 கோடி செலவாகும் என தெரிவித்துவிட்டு, தற்போது கணக்கெடுப்பிற்கு வெறும் ரூ.575 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதன் நோக்கம் என்ன? இதுவும் தலைப்பு செய்திக்கான அறிவிப்பா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற கேள்விகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருவது ஒருபுறம் இருக்க, பொதுமக்களும் இது சார்ந்த பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Also Read: ”கிரிமினல் வேலையில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” : நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் தாக்கு!