Politics

இந்தியக் கூட்டாட்சியை காக்கும் கலங்கரை விளக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முரசொலி தலையங்கம் புகழாரம்!

இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் திராவிட நாயகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து, 'கூட்டாட்சியைக் காக்கும் தலைவர்' என்று அவருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டத்தை இந்திய கூட்டாட்சியைச் சீரமைக்கும் கூட்டமாக மாற்றிக் காட்டியதன் மூலமாக இந்தியத் தலைவராக உயர்ந்து நிற்கிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஐந்து செய்திகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கையாக அறிவித்துள்ளார்.

1. "மக்கள்தொகை கணக்கெடுப்பு" (Census) அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு என்பது நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாகப் பாதிக்கப் போகிறது. மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகம் இழக்க நேரிடும்.

2. இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களைப் பற்றியது.The loss of parliamentary seats is not just about reduced numbers in the Lok Sabha. It is about the erosion of our power, our rights, and our future.

3. தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதித்தால், நம் சொந்தநாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது.

4. ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கையானது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது.

5. இந்தப் போராட்டம் எல்லை வரையறைக்கு எதிரானது அல்ல. இந்தப் போராட்டம் நியாயமான எல்லை வரையறையை வலியுறுத்துகிறது. This fight is not against delimitation.This fight is for fair delimitation.

– ஆகிய ஐந்தும் தான் இந்திய நாட்டுக்கு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுப்பி இருக்கும் செய்தி ஆகும். இது ஏதோ இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மாநிலங்களுக்கான செய்தி மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களுக்குமான செய்தி தான்.

இந்தியக் கூட்டாட்சியில் நம்பிக்கையில்லாத கட்சி பா.ஜ.க. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கையில்லாத கட்சி பா.ஜ.க. மாநிலங்களை மொத்தமாக ஒழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க. மாநிலங்களே இருக்கக்கூடாது என்று நினைக்கும் கட்சி பா.ஜ.க. பல்வேறு இனம்,மொழி, பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட மக்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கும் கட்சி பா.ஜ.க. இந்த நோக்கத்தை பல்வேறு வகைகளில் அது செயல்படுத்தி வருகிறது.

இந்தியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு மொழிகளை அழித்தார்கள். அழிக்க நினைக்கிறார்கள். ஒரே நாடு என்பதன் மூலமாக இந்திய மக்களின் பண்பாட்டைச் சிதைக்க நினைக்கிறார்கள். மாற்று மதம் கொண்டவர்களை மனிதர்களாகவே அவர்கள் நினைப்பது இல்லை என்பதற்கு உதாரணம் தேவையில்லை.

இந்த வரிசையில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்து, ஒன்றிய அரசைப் பார்த்து பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்கும் நிலைக்கு மாநில அரசுகளைத் தள்ளி விட்டார்கள். இவை அனைத்தையும் உணர்ந்து, எச்சரிக்கை உணர்வோடு குரல் கொடுக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் இருக்கிறார். பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக எதிர்ப்பது என்பது வேறு. பா.ஜ.க. என்ற அரசியல் கட்சியின் மூலத் தத்துவத்தை எதிர்த்துக் களமாடுவது என்பது வேறு.

‘நமக்கும் அவர்களுக்குமான யுத்தம் என்பது இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான யுத்தம்' என்று முதலில் சொன்னவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். இந்தக் குரலை தமிழ்நாட்டுக்குள் மட்டும் ஒலிக்காமல் அனைத்துஇந்தியா முழுமைக்கும் ஒலிக்க வைத்தது தான் மு.க.ஸ்டாலின் அவர்களது வெற்றியாகும். சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை உருவாக்கினார். மாநில சுயாட்சிக் குரலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்றார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கு எதிராகவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்தார். இதனைச் செயல்படுத்துவதற்கு 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி அனைத்துக் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார்.

'இந்தியா' கூட்டணியை உருவாக்குவதற்கு முன்பு வரை தனித்தனித்தீவாக இருந்த அரசியல் கட்சிகளை ஒன்றாக்கிக் காட்டுவதற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டுக் கொடுத்த, பாதை மிகமிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தொகுதிகளை விட்டுத் தருதல் என்ற பல்வேறு வழிமுறைகளை 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் வகுத்துக் கொடுத்தார்.

பெரும்பான்மையை இழந்து கூட்டணிக் கட்சிகளின் தயவோடு தான் ஆட்சியில் இருக்கிறது பா.ஜ.க. இன்றைக்கு அவர்களால் நிம்மதியாக நாடாளுமன்றத்தைக் கூட நடத்த முடியாத அளவுக்குத் தான் நிலைமை உள்ளது. இந்த நிலையில் தான் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையைக் கையில் எடுத்து, இதனால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து விட்டார் மு.க.ஸ்டாலின். இதனையும் பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை.

'தமிழ்நாடு முதலமைச்சர் அவரது மாநிலத்துக்குள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் நாம் அதைப் பற்றி கவலைப்படப் போவது இல்லை. ஆனால் அவரது செயல்பாடுகளைப் பார்த்து மற்ற மாநிலக் கட்சிகளும் செயல்படுகின்றன. அதுதான் பெரிய பிரச்சினையாக மாறுகிறது' என்று பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவர் தனிப்பட்ட கலந்துரையாடலில் சொல்லி இருக்கிறார். இதுதான் மு.க.ஸ்டாலின் அவர்களது மாபெரும் வெற்றியாகும். இந்தியக் கூட்டாட்சியானது செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிக்கும் கலங்கரை விளக்காக உயர்ந்து விட்டார் மு.க.ஸ்டாலின்.

Also Read: 3 நாட்களில் 5000 பேர் வருகை.. வெற்றிகரமாக முடிந்த தமிழ்நாடு பயணச்சந்தை.. அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்