சுற்றுலாத்துறை சார்பில் கடந்த மார்ச் 21 முதல் 23 வரை தமிழ்நாடு பயணச்சந்தை நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த சூழலில் 5000-த்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு பயணச்சந்தைக்கு வருகை புரிந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள் கடந்த 21.03.2025 அன்று துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது கடந்த மார்ச் 21 முதல் 23 (நேற்று) வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இப்பயணச்சந்தையின் இரண்டாம் நாளான மார்ச் 22ம் தேதி பிற்பகல் முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதியும் வழங்கப்பட்டது. மாநிலத்தின் வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், தொழில்துறை ஒத்துழைப்பை வளர்க்கவும், சுற்றுலாத் துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு ஒரு முதன்மை தளமாக செயல்படும்.
தமிழ்நாடு பயணச்சந்தை நிகழ்விடத்தில், Travel and Tourism Fair அமைப்பின் மூலம் பயணச்சந்தை நடத்தப்பட்டது ஒரு கூடுதல் சிறப்பாகும். இதில் தெலுங்கானா, உத்தரகண்ட், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, நேபால் டூரிஸம், ஆந்திரப்பிரேதேசம் டூரிஸம், டெல்லி டூரிஸம், இந்தியா டூரிஸம், ஜார்க்கண்ட் டூரிஸம், கேரளா டூரிஸம், பஞ்சாப் டூரிஸம் உள்ளிட்ட மாநில அரசு சுற்றுலாத்துறை அரங்குகளும் அமைக்கப்பட்டு பயணச்சந்தைக்கு வருகை புரியவர்களுக்கு சிறந்த அனுபவமாக விளங்கியது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்து, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு பயணச்சந்தையும் ஒரு சிறந்த முன்னெடுப்பாகும்.
இப்பயணச்சந்தையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் பயண முகவர்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சார்ந்த தொழில் முனைவோர் ஆகியோர் கலந்துகொண்டு, சுமார் 115 அரங்குகள் அமைத்துள்ளனர். மேலும் இப்பயணச்சந்தைக்கு சிங்கப்பூர், மலேசியா, அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, துருக்கி ஆகிய அயல்நாடுகள் மற்றும் 32 உள்நாட்டு முகவர்கள் மற்றும் முதலிட்டாளர்கள் பங்குபெற்று தமிழ்நாட்டு முகவர்களுடன் தொழில் சார்ந்த கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சுற்றுலாப் பயணச்சந்தை 2025, பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், விருந்தோம்பல் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களை ஒன்றிணைத்து, மாநிலத்தின் விரிவான சுற்றுலா வாய்ப்புகளை கண்டறியும். பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) போன்ற முக்கிய பிரிவுகளில் வளர்ந்து வரும் போக்குகள், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த விவாதங்களுக்கு இந்த நிகழ்வு வழிவகுதுள்ளது.
உத்திசார் முன்முயற்சிகள் மற்றும் வலுவான கொள்கை ஆதரவின் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு பயணச் சந்தை 2025, புதிய வணிக வாய்ப்புகளை வெளிப்படுத்துவதுடன், தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதுடன், மாநிலத்தின் பார்வையை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது .
இந்த பயணசசந்தையில் சர்வதேச அளவில் பயண ஏற்பாட்டாளர்கள் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி முகவர்கள் மற்றும் மாநில அளவிலான பயண ஏற்பாட்டாளர்கள் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி முகவர்கள் மற்றும் பொது மக்கள் என 5000-த்திற்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாடு பயணச்சந்தைக்கு வருகை புரிந்துள்ளனர் என சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தகவல்.