Politics
"ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் !
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று அவமதித்து பேசினார். இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது கருத்தை தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார்.
இந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்துப் தனது சமூகவலைத்தள பதிவில், "தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? நீங்கள் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா ?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!" என்று கூறியுள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!