இளையராஜா எழுதிய சிம்போனிக்கு வேலியன்ட் என பெயரிடப்பட்டது. இது லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. ராயல் பிலோர்மோனிக் இசைக்குழுவுடன் சேர்ந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட இளையராஜாவின் வேலியண்ட் சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் எனும் சாதனையை இசைஞானி இளையராஜா படைத்துள்ளார்.
லண்டனில் சிம்போனி இசையை அரங்கேற்றம் செய்த பிறகு சென்னை வந்த இசைஞானி இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதோடு ஏராளமான இளையராஜா ரசிகர்களும் விமான நிலையத்தில் இருந்து இளையராஜாவை ஆரவாரம் செய்து வரவேற்றனர்.மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரும் இசைஞானி இளையராஜாவை விமான நிலையத்தில் வரவேற்றனர்...
சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியமைத்து வைத்ததே இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தார்.இது சாதாரண விஷயம் அல்ல. மியூசிக்கை எழுதிவிடலாம் எழுதி கொடுத்தால் அவர்கள் வாசித்து விடலாம் .ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் வாசித்தால் எப்படி இருக்கும், நாம் எல்லோரும் பேசுகிற மாதிரி எல்லோருக்கும் ஒன்றும் புரியாத மாதிரி இருக்கும் அல்லவா
அரங்கேற்றம் பொழுது எந்தவிதமான விதிமுறைகளுக்கு மீறி தவறு நடக்காமல் மிக்டெல் டாம் என்பவர் தலைமையில் 80 பேரும் இசை அமைத்தார்கள். இந்த சிம்போனி அரங்கேற்றத்தின் போது மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது. எல்லோருடைய கவனமும் அதன் மீதுதான் இருக்கும். ஒரு ஸ்வரம் வாசிக்கும் போது அந்த ஒரு ஸ்வரத்தை கையை காட்டி வாசிக்கும் போது எல்லோருடைய கவனமும் அந்த ஒரு நோட்டில் இருக்கும். அவர்கள் வாசிக்கும் போது கேட்கிறவர்கள் மூச்சு விட மறக்கும் அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு ஸ்வரத்திற்கு இந்த கதி என்றால் சிம்பொனி முழுவதும் நான்கு பகுதிகளாக கொண்டது.
1st moment
2rd moment
3rd moment
4th moment உள்ளது.
வெஸ்டர்ன் மியூசிக்கலில் சிம்போனி வாசித்து முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள். கைதட்ட கூடாது அது விதிமுறை. ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும் அனைவரும் 1st moment முடிந்ததும் கைதட்டினார்கள். வாசிப்பவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் திரும்பி என்னை பார்த்தார்கள். அவர்கள் அப்படித்தான் என சொல்லி சிரித்தேன்.
ஒவ்வொரு momentயும் கொட்டி தீர்த்தார்கள். இசையின் அமைப்பை கேட்டுவிட்டு அப்போது ரசித்ததை அப்போது நம் ஆட்கள் வெளிப்படுத்தி விடுவார்கள். அந்த நேரத்தில் ரசித்ததை கரகோஷத்தின் மூலமாக வெளிப்படுத்தினர். முதலமைச்சர் அரசு மரியாதையோடு வரவேற்று இருப்பது எனக்கு நெஞ்சத்தை நெகிழ வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தி கொண்டிருப்பது வரவேற்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இசையை டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது. டவுன்லோட் என்பதை மட்டமாக நினைக்க வேண்டாம். நேரடியாக கேட்க வேண்டும் என்று மக்கள் முன்பாக நேரடியாக இசைத்து அந்த அனுபவத்தை அது வேறு மாதிரியான அனுபவம் கேட்க வேண்டும்.
சிம்போனி இசையை 13 தேசங்களில் நடத்த இருப்பதற்கு நாட்கள் குறித்து விட்டோம். அக்டோபர் 6 ஆம் தேதி துபாயில் செப்டம்பர் 6 ஆம் தேதி பாரிசில் இந்த சிம்போனி இசை செல்ல இருக்கிறது. என்னுடைய மக்கள் என் மீது அன்பும் வைத்துள்ளார்கள், தெய்வமாக கொண்டாடுகிறார்கள், இசை கடவுள் என்கிறார்கள். நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் தவிர என்னைப் பற்றி ஒரு எண்ணமும் கிடையாது.
என்னை இசை கடவுள் என சொல்லும் போது எனக்கு எப்படி தோன்றும் என்றால் இளையராஜா அளவிற்கு கடவுளை கீழே இறக்கி விட்டார்கள் என்றுதான் தோன்றும். பண்ணைபுரத்தில் இருந்து புறப்படும் போது வெறும் காலோடு நடந்து, இந்த இடத்திற்கு என்னுடைய காலில் வந்து தான் நிற்கிறேன். இதை இளைஞர்கள் உணர வேண்டும். அவர்களும் வாழ்க்கையில் இதை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு அவர்கள் அவரது துறையில் மென்மேலும் வளர்ந்து நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.