Politics

"வாங்குவதற்கு மேல் கூவும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார்" - திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சனம் !

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை செயலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மற்றும் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆ ராசா, "அரசியல் சட்டப் பிரிவின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு - சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் மறுசீரமைப்பு குறித்து புதிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் அந்த கூறப்பட்டுள்ளது. சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் அமைக்கப்படும் என்று தகவல் கிடைத்ததன் பெயரில் முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

தொகுதி சீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே இருக்கக்கூடாது என்பது நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது எந்த ஒரு தேவையும் இல்லாத நிலையில் தொகுதி மறு சீரமைத்து செய்தால், தென் மாநிலங்கள் பெரியளவில் பாதிக்கப்படும் என்பதை உண்டாக்கும் என்று தான் முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

எதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என்பதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று சொல்கிறார். அவர் சொல்வதுபோல அமித்ஷா கூறவில்லை. வாங்குவதற்கு மேல் கூவும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார்.

1971 ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் உயருமா ? அல்லது விகிதாச்சார அடிப்படையில் உயருமா என்பதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தவில்லை.

மக்கள்தொகை அடிப்படையில் வடமாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கினாலும் அது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிதான். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே மறுசீரமைப்பு செய்யக்கூடாது. தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும்"என்று கூறியுள்ளார்.

Also Read: கும்பமேளா ரயில் பரிதாபங்கள் : "பொய் பேசுவதற்கு அமைச்சர் வெட்கப்படவேண்டும்" - செல்வப்பெருந்தகை !