Politics
தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் : கழக இளைஞரணி நிறைவேற்றிய 12 தீர்மானங்கள் விவரம் உள்ளே!
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட- மாநகர - மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கழக இளைஞர் அணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று (பிப்.20) நடைபெற்றது.
அப்போது கழக இளைஞரணி சார்பில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,
தீர்மானம் : 1
திராவிட மாடல் நாயகரை வணங்கி, வாழ்த்துகிறோம்!
இந்திய அளவில் உறுதியான கூட்டணி அமைத்து தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தலைவர் அவர்கள், ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதிப்பகிர்வு, கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமாகச் செயல்படும் ஆளுநர், அவதூறு பரப்பும் மக்கள் விரோத சக்திகள் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி, நல்லாட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இளையோர் எழுச்சி நாளான கழகத் தலைவர் அவர்களின் பிறந்த நாளை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது, மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது, கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி என மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுமாறு இளைஞர் அணிச் செயல்வீரர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 2
மதுரை ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்க ஒன்றிய அரசு எடுத்த முடிவைக் கைவிட வைத்த முதலமைச்சருக்கு பாராட்டு!
‘நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது’ என்று உறுதிபட தெரிவித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் முடிவைக் கைவிட வைத்த கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 3
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி!
மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று, தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், திராவிட மாடல் ஆட்சி நல்லாட்சி என்பதற்கான நற்சான்றிதழாக, எதிரில் நின்ற அத்தனை வேட்பாளர்களும் கட்டுத்தொகை இழக்கும்படி, மாபெரும் வெற்றியைக் கழகத்துக்கு அளித்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 4
தமிழர் நாகரிகத் தொன்மையை வெளிக்கொணர்ந்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘இரும்பின் பயன்பாடு’, தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது, சிந்துவெளிக்கும் முந்தைய தொன்மையான நாகரிகம் ‘தமிழர் நாகரிகம்’ என்ற அகழாய்வு முடிவுகளில் பெருமை கொள்கிறோம். தமிழர், திராவிடர் பெருமிதத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, மேற்கொள்ளப்படும் அனைத்து சதிகளையும் வென்று, அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்தி, வரலாற்றை மீட்டெடுக்கும் கழகத்தலைவர், முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 5
இளம் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் - துணை முதலமைச்சருக்கு நன்றி!
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நம் இளைஞர் அணிக்கு கழகத்தலைவர் இட்ட கட்டளைகளில் ஒன்று ‘ஆற்றல்மிக்க நூறு இளம் பேச்சாளர்களைக் கழகத்துக்குத் தேர்ந்தெடுத்துத் தாருங்கள்’ என்பது. அதை நிறைவேற்றும் விதமாக ‘என் உயிரினும் மேலான’ என்ற பிரமாண்ட பேச்சுப்போட்டி நடத்தி 17,000 போட்டியாளர்களில் 182 இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
பல்வேறு தலைப்புகளில் பொருத்தமான ஆளுமைகளைக் கொண்டு பயிற்சி முகாமை சிறப்பாக நடத்தி, அவர்களைக் கருத்தியல் ரீதியாகத் தயார்படுத்தியிருக்கும் கழக இளைஞர் அணிச் செயலாளர், துணை முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 6
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டைப் புறக்கணித்த ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதுடன், தொடர்ச்சியாகத் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லாமல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 7
கல்வியைக் காவிமயமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்!
மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதுடன் கல்வியைக் காவிமயமாக்கும் வகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு உள்பட பலவற்றில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ள பல்கலைக்கழக மானியக்குழுவையும் பின்னிருந்து இயக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 8
ஒன்றிய அரசின் சிறுபான்மையின விரோதப் போக்குக்குக் கண்டனம்!
சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பறிக்கும்வகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்த ‘வக்பு வாரிய மசோதா’, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. என்றாலும், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை முற்றிலுமாக நிராகரித்து, வக்பு வாரிய மசோதாவை சட்டமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கை இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 9
மாநில உரிமை - கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் ஆளுநருக்குக் கண்டனம்!
தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்புக்கும் நீதிமன்றக் கண்டனங்களுக்கும் ஆளானாலும், மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மேலும் தாமதப்படுத்துவது, பா.ஜ.க.வின் நிர்வாகி போல் பிற்போக்குக் கருத்துகளைப் பொதுவெளியில் பேசித் திரிவது என்று அரசியல் சட்டத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிராகச் செயல்படும் ஆளுநரை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 10
தந்தை பெரியார் மீது அவதூறு பரப்பும் நாசகார சக்திகளுக்குக் கண்டனம்!
மதவாத பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், அதை முறியடிக்கும் தமிழ்நிலத்தின் தன்மானத் தடுப்புச்சுவராக விளங்குபவர் தந்தை பெரியார். நேரடியாகத் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாமல், கூலிகளை அமர்த்தி பெரியாரின் சிந்தனைகளையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தி, எப்படியாவது தமிழ்நாட்டில் வேரூன்றப் பார்க்கிறது பா.ஜ.க.
அந்த மதவாதச் சக்திகளின் கைக்கூலிகளாய், தந்தை பெரியார்மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசும் நாசகார சக்திகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழர்களின் சிந்தனைகளில் இருந்து பெரியாரை அகற்ற வேண்டும், திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் பலர் முயன்றும் முடியாத காரியம், இப்போதும் எப்போதும் நிறைவேறப் போவதில்லை என்பதை இந்தக் கூட்டம் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.
தீர்மானம் : 11
கும்பமேளா கொலைகளுக்குக் காரணமான பா.ஜ.க. அரசுகளுக்குக் கண்டனம்!
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில், ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகளின் நிர்வாகச் சீர்கேடு மற்றும் அலட்சியத்தின் காரணமாக பலியான 30 பேர்களின் குடும்பத்தினருக்கும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், ‘இந்துக்களின் பாதுகாவலர்’ என்று கூறிக்கொண்டு இத்தனை பேரின் மரணத்திற்கு எந்தப் பொறுப்பும் ஏற்காத ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசுகளுக்கு கடும் கண்டனத்தை இக்கூட்டம் தெரிவிக்கிறது.
தீர்மானம் : 12
தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள்!
மும்மொழிக்கொள்கையைத் திணிக்கப் பார்க்கும், நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்குப் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும்வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் இளைஞர் அணி சார்பில், கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்தப் பொதுக்கூட்டங்களில் ‘என் உயிரினும் மேலான’ கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
முதல் மொழிப் போரை முன்னின்று நடத்திய தந்தை பெரியார், இருமொழிக் கொள்கையைக் காத்த பேரறிஞர் அண்ணா, ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே, நீ நாடி வந்த கோழை நாடு இதுவல்ல’ என்று 13 வயதில் தமிழ்க்கொடி ஏந்திய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில், கழகத் தலைவர் தலைமையில், இளைஞர் அணிச் செயலாளர் வழிகாட்டுதலில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சியை முறியடித்து, மொழியுரிமையை நிலைநாட்டுவோம் என்று இக்கூட்டம் உறுதியேற்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!