Politics

“மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்...” - - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை கோபாலபுரத்தில் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் குத்துச்சண்டை அரங்கத்தை துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த மினி ஸ்டேடியத்தை துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா மற்றும் விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னை கோபாலபுரத்தில் சர்வதேச அளவில் குத்துச்சண்டை அரங்கம் அமைக்க முடிவு  செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

தற்போது அந்த பணிகள் முடிவுற்று, வரும் 25-ம் தேதி தமிழக முதலமைச்சர் குத்துசண்டை அரங்கத்தை தொடங்கி வைக்கிறார். அதற்கான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகிறோம். இந்த பணிகள் எந்த அளவுக்கு செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 790 பேர் இந்த அரங்கில் அமர்ந்து இந்த விளையாட்டை ரசிப்பதற்கு அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குத்துச் சண்டை அரங்கிலேயே ஜிம் மற்றும் பயிற்சியாளர்‌ அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச வீரர்கள் வீராங்கனைகள் இந்த குத்துச்சட்டை அரங்கம் முழு அளவில் பயனடையும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. நேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசு கல்வியில் மட்டுமல்ல, ஒன்றிய அரசு அறிவித்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயும் ஒதுக்கவில்லை, எந்த திட்டமும் அறிவிக்கவில்லை.

தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையைதான் நாங்கள் கடைப்பிடிப்போம் என பேரறிஞர் அண்ணா தெரிவித்துள்ளார். எப்போதும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை குறுக்கு வழிகளில் திணிக்க முயன்றாலும் எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையும் தமிழ்நாடு அரசும், அனுமதிக்காது, தமிழ்நாட்டு மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் பதில் அளிப்பார்கள். எந்த நேரத்திலும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டுக் கொடுக்க மாட்டார். நாடு முழுவதும் ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு புரிதல் உள்ளது. இன்றைய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது  வன்மையாக கண்டிக்கிறோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இரட்டை வேடம் யார் போடுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.” என்றார்.

Also Read: கும்பமேளா விபத்துகள் : யோகி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் - செல்வப்பெருந்தகை !